2024 நாடாளுமன்ற தேர்தலிலும் திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடரும்: மல்லிகார்ஜுன கார்கே உறுதி

By செய்திப்பிரிவு

சென்னை: 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடரும் என்று சென்னையில் நடந்த மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.

சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில் சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. தொடக்கத்தில் ‘ஸ்டாலின் 70' என்ற தலைப்பில் முதல்வரின் 70 ஆண்டுகால வாழ்க்கை பயணம் குறித்த காணொலி தொகுப்பு திரையிடப்பட்டது.

தொடர்ந்து, சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில் சிறப்பு விருந்தினர்களுக்கு மரியாதை செய்யப்பட்டது. அதன்படி, மாவட்டச் செயலாளரும் சுகாதாரத்துறை அமைச்சருமான மா.சுப்பிரமணியன் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பொன்னாடை போர்த்தியும் வெள்ளி செங்கோல் வழங்கியும் கவுரவித்தார். தொடர்ந்து, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பிஹார் துணை முதல்வர்தேஜஸ்வி யாதவ் ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி, நினைவு பரிசு வழங்கினார். விழாவில் வரவேற்புரையாற்றி திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு பேசியதாவது:

ஒற்றுமை இருந்தால் வெற்றி: தமிழகத்தின் திராவிட மாடல் கொள்கை, இந்தியா முழுவதுக்கும் எடுத்துச் சொல்லும் மாடல். திமுக கூட்டணியில் 4 தேசிய கட்சிகள் உள்ளிட்ட 10 கட்சிகள் உள்ளன. கட்சிகளுக்குள் ஒற்றுமை இருந்தால், அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற முடியும். திராவிட மாடல் கொள்கையின் அடிப்படையில் எல்லா கட்சிகளையும் இணைத்து, அரவணைத்து அழைத்து செல்லும் பாங்கு ஸ்டாலினுக்கு உண்டு.

இந்த பண்பை, அறிவாற்றலை இந்திய அரசியல் தலைவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இது மாநில அரசியலின் தடம் என்று எண்ண வேண்டாம். இந்தியாவின் அரசியலுக்கு தேவைப்படும் தடம். இந்த தடத்தில் நீங்கள் செல்வதே தேர்தலுக்கான நகர்வாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தலைமையுரையில் பேசியதாவது: திமுக கட்சியையும், ஆட்சியையும் ஒருசேர திறம்பட நடத்தி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலினை இந்திய நாடே எதிர்பார்க்கிறது. நாட்டின் இறையாண்மைக்கு எப்போதெல்லாம் ஆபத்து ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் தமிழகம்தான் கைகொடுத்துள்ளது.

மிசா சட்டத்தை எதிர்த்து குரல்கொடுத்து நாட்டின் ஜனநாயகத்தை கருணாநிதி காப்பாற்றினார். இன்று நாட்டின் ஜனநாயகத்தை முதல்வர் ஸ்டாலின் காப்பாற்ற வேண்டுமென எதிர்பார்ப்பு எழுந்துள்ளது என்று தெரிவித்தார்.

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்த நாளில், அவர் நீண்ட ஆயுள், உடல்நலத்தை பெறவும், தமிழக மக்களுக்காக நீண்ட ஆயுளுடன் தொடர்ந்து பணியாற்றவும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவர் பெரியார், கொள்கை, பேரறிஞர் அண்ணா, கருணாநிதி ஆகியோரின் வாரிசாக உள்ளார்.

திமுகவும், காங்கிரஸூம் கொள்கை ரீதியாக ஒன்றிணைந்திருக்கிறது. 2004, 2009 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவை தேர்தல் வெற்றிக்கும், 2006, 2021 சட்டப்பேரவை தேர்தல் வெற்றிக்கும் திமுக - காங்கிரஸ் கூட்டணி வழிவகுத்தது. 2024 மக்களவை தேர்தல் வெற்றிக்கு நமது கூட்டணி தொடரும். அதனை வலுப்படுத்த, ஸ்டாலின் பிறந்தநாளில் அடித்தளம் அமைக்க வேண்டும்.

மத்திய பாஜக அரசின் தோல்வியால் 23 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வறுமையில் தள்ளப்பட்டுள்ளனர். அக்கட்சி தேர்தலில் வெற்றி பெறுவதற்காக சமூகங்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்துகிறது. ஆனால் அதற்கு தமிழகம் ஒரு அங்குலம் கூட இடம் தராது. பாஜக அரசு, நீதித்துறை, தேர்தல் ஆணையம் உள்ளிட்ட முகமைகளை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள விரும்புகிறது. அரசியலமைப்பு சட்டத்தை மாற்றவும் முயற்சிக்கிறது. அதை தடுக்க அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம். இவ்வாறு அவர் பேசினார்.

சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் பேசியதாவது: தமிழகத்தின் வளர்ச்சிக்காக முதல்வர்மு.க.ஸ்டாலின் சிறப்பாக பணியாற்றி வருகிறார். அவர், தான் ஒரு நாத்திகவாதியென வெளிப்படையாக அறிவித்துள்ளார். அதே நேரம், அவர் எந்த மத நம்பிக்கைக்கும் எதிரானவர் கிடையாதவர் எனவும் தெளிவுபடுத்தியுள்ளார். சமூக நீதி, சமத்துவம் மற்றும் மறுமலர்ச்சிக்காக அவர் ஆற்றி வரும் பணிகள் பாராட்டுக்குரியவை.

தேசிய அளவில் உயர்ந்த இடம்: ஸ்டாலின் பதவியேற்ற ஓர் ஆண்டுக்குள் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்இணைப்பு வழங்கும் திட்டம், உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம் திட்டம், குறிப்பாக கரோனா தொற்று பேரிடர் சமயத்தில் அதைக் கட்டுப்படுத்த சிறப்பாக பணியாற்றியதோடு மக்களுக்கு ஏராளமான நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளார். சமூக நீதியையும், அனைவருக்கும் சமமான நல்லாட்சியை வழங்கவும், தேசிய அளவில் அரசியலில் உயர்ந்த இடத்தை எட்டவும் நான் அவரை வாழ்த்துகிறேன்.

பிஹார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் பேசியதாவது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மட்டுமின்றி பிஹார் மாநிலத்தின் முதல்வர் நிதிஷ் குமாருக்கும் இன்று தான் பிறந்தநாளாகும். இருவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். திமுக தலைமையில் தமிழகத்தில் சமூக நீதி கட்டிக்காக்கப்பட்டு வருகிறது. அத்தகைய மாநிலத்தில், சமூகநீதி கொள்கை கொண்ட கட்சிகள் சந்திக்கும் நாளாக இன்று அமைந்து இருக்கிறது. சமூக நீதிக்கு எதிராக பாஜக செயல்பட்டு வருகிறது. எனவே, நாடு முழுவதும் சமூகநீதி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய தேவையுள்ளது.

ஒரே குடையின் கீழ் வரவேண்டும்: சமூகநீதியை போதிக்கும் தமிழகத்தை மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும். தற்போது நாட்டின் மிகப்பெரும் பிரச்சினைகளாக வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம் இருக்கிறது. பாஜக ஆட்சியில் ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது. அறிவிக்கப்படாத அவசரநிலை பிரகடனம் அமலில் இருப்பது போலவே இந்த ஆட்சி இருக்கிறது. அதனால் பாஜகவுக்கு எதிராக அனைத்து கட்சிகளையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவர வேண்டும். நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த இந்தியாவே ஸ்டாலினை எதிர்நோக்கியுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நன்றியுரையில் பேசியதாவது: மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த எனக்கு, பகுதி இளைஞர் அணி, மாவட்ட இளைஞர்கள் அணி அமைப்பாளர், மாநகராட்சி மேயர், சட்டப்பேரவை உறுப்பினர், சுகாதாரத் துறை அமைச்சர் என பல்வேறு பொறுப்புகளை கொடுத்து, எனக்கு வாழ்நாள் சிறப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் சேர்த்துள்ளார்.

அவரது 70-வது பிறந்தநாள் விழா நடத்தும் வாய்ப்பை சென்னை தெற்கு மாவட்ட திமுகவுக்கு தந்ததுதான் அனைத்தைக் காட்டிலும் சிறந்தது என்பதை நான் இங்கு மகிழ்ச்சியுடனும், பெருமையுடனும் பதிவு செய்கிறேன். 36 ஆண்டுகளுக்கு பிறகு தனது பிறந்தநாள் விழாவில் பங்கேற்று உரையாற்றுகிறார் என்பது மிகப்பெரிய அளவிலான மகிழ்ச்சியான ஒன்று. இவ்வாறு மா.சுப்பிரமணியன் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

48 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்