ஆசிரியர்களின் நலன் காக்க ரூ.225 கோடியில் புதிய திட்டங்கள்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: தனது பிறந்த நாளை முன்னிட்டு அரசுப் பள்ளிகளில் சிறப்பாக செயல்படும் ஆசிரியர்களுக்கு 3 புதிய திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி, * அனைத்து இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் கைக்கணினி (Tablet) வழங்கப்படும். * மாணவர் வாழ்க்கை ஏற்றம் காண அயராது உழைக்கும் ஆசிரியப் பெருமக்களின் உடல்நலம் காக்க, அனைத்து ஆசிரியர்களுக்கும் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்யப்படும். * உயர்கல்வி பயிலும் ஆசிரியர்களின் குழந்தைகளுக்கான கல்விச் செலவு 50,000 ரூபாய் வரை உயர்த்தி வழங்கப்படும். அரசின் நலத்திட்ட உதவிகளை மாணவர்களிடம் சிறப்பாக கொண்டு சேர்க்கும் ஆசிரியர்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர்.

சென்னை டிபிஐ வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்," கல்வி என்பது நாம் போராடிப் பெற்ற உரிமை. உலக அறிவை வளர்க்கவும், பகுத்தறிவோடு சிந்திக்கவும் கல்வி அறிவு மிகவும் முக்கியம். ஒருவர் வாழ்க்கையில் கற்றுக் கொள்கின்ற கல்வி அவரை என்றைக்கும் கைவிடாது. அதனால்தான், கல்வி யாராலும் திருட முடியாத சொத்து என்று சொல்கிறேன்.

குழந்தைகள் பள்ளிகளை நோக்கி வரவேண்டும். கல்வியைப் பெறவேண்டும் என்பதற்காகத்தான் நீதிக்கட்சி காலத்தில் இருந்து பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம். அதிலேயும், தரமான கல்வியைக் கொடுக்க கடந்த இரண்டு ஆண்டுகளாக, அரசுப் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்காக நம்முடைய திராவிட மாடல் அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

அதில் முதன்மையான திட்டம் என்றால் அது “நான் முதல்வன்”. நான் முதல்வன் என்று என்னை சொல்லவில்லை. என்னை, தமிழக மக்கள் முதல்வராக ஆக்கினார்கள். என் தலைமையிலான நமது ஆட்சியில், மாணவ, மாணவியர் அனைவரும் முதன்மையானவர்களாக உருவாக்கப்பட்டது தான் நான் முதல்வன்.

உயர்க்கல்வி கற்பதற்கும் நல்ல முறையில் வேலைவாய்ப்புகள் பெறுவதற்கும் ஒவ்வொரு பள்ளியிலும் வழிகாட்டி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. அதற்கேற்ற வழிகாட்டிநூல், பாட வேளை அந்தந்த பள்ளியிலிருந்தே ஒரு வழிகாட்டி ஆசிரியர் என அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

2021-2022 கல்வி ஆண்டில், பன்னிரெண்டாம் வகுப்பு முடித்தவர்களை அவர்கள் உயர்க்கல்வி சேர்ந்துவிட்டார்களா என்று உறுதி செய்வதற்கான பல்வேறு முயற்சிகளை பள்ளிக் கல்வித் துறை எடுத்தது. அதில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் சிலர் உயர்கல்விக்கு செல்லவில்லை என்பதை அறிந்து, அவர்களை பள்ளிக்கு வரவழைத்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து உயர்கல்வி கற்பதற்கான திட்டங்களும் நிறைவேற்றப்பட்டது. இந்த முயற்சி நடப்பு கல்வியாண்டிலும் செயல்படுத்தப்படும்.

மாணவர்கள் ஒருவர்கூட தவறாமல் உயர்கல்விக்கு செல்ல வேண்டும். அதில் திமுக அரசு உறுதியாக இருக்கிறது. உயர்கல்வியை மாணவியர் அனைவரும் பெற வேண்டும் என்பதற்காக புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவிகள் உயர்கல்வி பயில செல்லும்போது அவர்களுக்கு மாதாமாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டம்தான் புதுமைப்பெண் திட்டம். இது புரட்சிகரமான திட்டம் என்பதை பயன்பெறும் மாணவிகளும் அவர்களுடைய பெற்றோரும் பெருமையாகச் சொல்கிறார்கள்.

அதேமாதிரி, அரசுப் பள்ளிகளில் பயின்றவர்களுக்கென தொழிற் கல்லூரியில் 7.5 விழுக்காடு இடஒதுக்கீடும் வழங்கப்பட்டு வருகிறது. சிறிய வயதிலேயே கல்வியில் ஆர்வம் வந்துவிட்டால், உயர்கல்வியில் உன்னத இடத்தைப் பிடிக்க முடியும்.

படிப்பில் ஆர்வம் ஏற்பட வேண்டும் என்றால், வயிற்றில் பசி இருக்கக்கூடாது. பள்ளிக்கு வருகிறபோது பசியோடு வந்தால் பாடம் மனதில் பதியாது. அதனால்தான் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை இந்தியாவிலேயே முதன்மையாக தமிழக அரசு செயல்படுத்தி இருக்கிறது. ஏழைக் குடும்பப் பிள்ளைகள், வேலைக்கு செல்லும் தாய்மார்களின் வீட்டுப் பிள்ளைகள் உட்பட பலரும் இத்திட்டத்தால் பலன் பெறுவதால், மாணவர்கள் பள்ளிக்கு வருவது அதிகரித்திருக்கிறது. இப்போது இந்தத் திட்டம் அனைத்து தொடக்கப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட இருக்கிறது.

மாணவர்களுடைய வருகையை உறுதி செய்ய வேண்டும். பாதியில் படிப்பை நிறுத்திவிடாதபடி கவனிக்க வேண்டும். இது அரசின் பொறுப்பும்கூட. அதனால்தான், கரோனா கால ஊரடங்கு காரணமாக கல்வி பாதிக்கப்பட்டு கற்றல் இடைவெளி ஏற்பட்ட நிலையில், அதனை சரிசெய்வதற்காக “இல்லம் தேடி கல்வி” எனும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 2 இலட்சம் தன்னார்வலர்களையும் ஏறத்தாழ 35 இலட்சம் மாணவர்களைக் கொண்டும் “இல்லம் தேடி கல்வி” திட்டம் சிறப்பாக இயங்கி வருகிறது. இதில் ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளியைக் குறைப்பதற்கு “எண்ணும் எழுத்தும்” திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு பாடங்களை மகிழ்ச்சியுடன் கற்பதற்கு வழி காணப்பட்டுள்ளது.

மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை தூண்டவும், பகுத்தறிவு மனப்பான்மையை வளர்க்கவும் அவர்களுக்கு அன்றாட அறிவியலையும் கணிதத்தையும் கற்றுத்தரும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டது தான் “வானவில் மன்றம்”. இதன் வாயிலாக மாணவர்கள் வகுப்புக்கு உள்ளேயும் வெளியேயும் உற்சாகமாக அறிவியலை கற்கின்றனர். பாடத்திட்டம் சார்ந்த அறிவையும் திறனையும் மேம்படுத்திக் கொள்வதுடன் தங்களின் தனிப்பட்ட கலைத் திறமையையும் மாணவர்கள் வெளிப்படுத்துவதற்காக அரசுப் பள்ளிகளில் கலைத் திருவிழாக்கள் சிறப்பாக நடைபெற்றன.

ஊர்த் திருவிழா போல அத்தனை கோலாகலம், கொண்டாட்டம். ஏறத்தாழ, 25 இலட்சம் மாணவ, மாணவியர் மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் இந்தக் கலைத் திருவிழாவில் பங்கேற்று தங்களுடைய திறமையை வெளிப்படுத்தினார்கள். வெற்றி பெற்ற மாணவர்கள், வரும் மாதங்களில் வெளிநாட்டு சுற்றுலாவிற்கு செல்லவிருக்கின்றனர். உலகளாவிய பார்வை உள்ளூரில் உள்ள மாணவர்களுக்கும் வாய்க்க வேண்டும் என்பதற்காக அரசுப் பள்ளிகளில் திரையிடல் நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. பல்வேறு மொழிகளின் திரைப்படங்களை, பல்வேறு நாடுகளின் பண்பாட்டை, நிலப்பரப்பை இந்த திரைப்படங்கள் வாயிலாகக் காண்பது அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மிகப்பெரிய அனுபவத்தை அளிக்கிறது. இந்த திரையிடலில் சிறப்பாக செயல்பட்ட மாணவர்களுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பும் காத்திருக்கிறது.

பள்ளிகளுக்கு சிறப்பு விருந்தினர்களாக சென்றுவந்த எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், திரை இயக்குநர்கள் ஆகியோர் அனுபவங்களை பொதுவெளியில் எழுதியும், பேசியும் வருகின்றனர். பிரபலமானவர்களின் கருத்துக்கள் அனைத்து தரப்பு மக்களிடமும் சென்று சேருகிறது.

படிப்புத் திறனுடன் படைப்புத் திறனும் சிறந்திட வேண்டும் என்பதே நமது நோக்கம். தமிழக பள்ளிக் கல்வி வரலாற்றில் முதன்முறையாக அரசுப் பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கென “தேன் சிட்டு” என்கிற இதழ் மாதம் இருமுறை வெளியாகிறது. தேன் மிட்டாய் போல “தேன் சிட்டு” இதழை மாணவர்கள் விரும்புவதுடன், இணையம் மூலம் நடக்கும் வினாடி-வினா போட்டிகளிலும் மாணவர்கள் மிக உற்சாகமாக பங்கேற்கிறார்கள். இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்றோர், சென்ற ஆண்டு துபாய்க்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஒவ்வொரு ஆண்டிலும் இந்த வெற்றிப்பயணம் தொடரும்.

கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் பள்ளிக் கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஏறத்தாழ 2000 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய கட்டுமானங்கள் நடைபெற்று வருகிறது. அரசுப் பள்ளிகளின் மேம்பாட்டிற்கென “நம்ம “ஸ்கூல் ஃபவுண்டேசன்” தொடங்கப்பட்டு இருக்கிறது. முன்னாள் மாணவர்கள், நிறுவனங்கள், பொதுமக்கள் என அனைவரும் தாங்கள் பயின்ற அரசுப் பள்ளிகளுக்கு உதவ இதனால் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இத்தகைய கட்டமைப்புகளும், கல்வி சார்ந்த புதிய திட்டங்களும் அனைத்து மாணவர்களும் உயர்கல்விக்கு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தின் விளைவுகள். இடைநிற்றல் மாணவர்களைக் கண்டறிவதும், அவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்துவந்து படிக்கச் செய்வதும், பொதுத் தேர்வில் தேறிய பிறகும் உயர்கல்வி பெறமுடியாமல் போன மாணவர்களை அடையாளம் கண்டு, அவர்களை மேலும் மேலும் படிக்கச் செய்யும் நோக்கத்துடன் செயல்படுவதும் ஆசிரியப் பெருமக்களே.

அரசின் எண்ணங்களுக்கு செயல்வடிவம் தருபவர்கள் ஆசிரியர்கள் தான். ஆசிரியர்களின் அளப்பறிய பணி இல்லையெனில், இத்தகைய திட்டங்கள் எதுவும் செயல்பாட்டிற்கு வந்திருக்க வாய்ப்பு இல்லை. ஆசிரியர்களின் முக்கியத்துவம் எந்த அளவுக்கு என்றால், அம்மா-அப்பாவுக்கு அடுத்த இடத்தில் கல்வி கற்றுத் தர ஆசிரியர்களான உங்களைத் தான் நம் சமூகம் வைத்திருக்கிறது. அப்படிப்பட்ட ஆசிரியர்களை ஊக்கப்படுத்த, வாசிப்புத் திறனை மேம்படுத்த, படைப்பாற்றலை வளர்க்க “கனவு ஆசிரியர்” என்ற மாத இதழ் வெளி வருகிறது.

மாணவர்களின் நலனுக்காக அயராது பாடுபட்டு வரும் ஆசிரியர் சமூகத்தை சிறப்பிக்கும் விதமாகவும், ஆசிரியர்கள் நலனைக் காக்கவும் புதிய திட்டங்களை இந்தக் காணொலி மூலம் அறிவிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

மாறி வரும் கற்றல், கற்பித்தல் முறைகளுக்கேற்ப தங்களை சிறப்பாக மெருகேற்றிக் கொள்வதற்கென அனைத்து இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் கைக்கணினி (Tablet) வழங்கப்படும். மாணவர் வாழ்க்கை ஏற்றம் காண அயராது உழைக்கும் ஆசிரியப் பெருமக்களின் உடல்நலம் காக்க, அனைத்து ஆசிரியர்களுக்கும் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்யப்படும். உயர்கல்வி பயிலும் ஆசிரியர்களின் குழந்தைகளுக்கான கல்விச் செலவு 50,000 ரூபாய் வரை உயர்த்தி வழங்கப்படும். அரசின் நலத்திட்ட உதவிகளை மாணவர்களிடம் சிறப்பாக கொண்டு சேர்க்கும் ஆசிரியர்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர்.

இந்தத் திட்டங்கள் சுமார் 225 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என்ற செய்தியை இந்தக் காணொலி மூலம் உங்களிடம் பகிர்ந்துகொள்வது பெரும் மகிழ்ச்சி. ஆசிரியர்களின் அர்ப்பணிப்பும் ஒத்துழைப்பும், கல்வித் துறையில் தமிழக அரசின் இலட்சிய இலக்கை அடைவதற்கு துணையாக இருப்பதால், மாணவர்கள் தங்கள் திறனை மேம்படுத்திக்கொண்டு நன்றாக கல்வி கற்று, உயர்க்கல்வியில் பல பல பட்டங்கள் பெற்று உயர்ந்த நிலைக்கு சென்றிட வாழ்த்துகிறேன்.

கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற மகாகவி பாரதியின் வரிகளை மாணவர்களும், ஆசிரியர்களும் நிலைநிறுத்துவார்கள் என்ற நம்பிக்கையினை வெளிப்படுத்தி, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர், அதிகாரிகள் உள்ளிட்ட அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்." இவ்வாறு முதல்வர் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்