ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை முன்வைத்து கரூர் மாநகராட்சி கூட்டத்தில் வாக்குவாதம்

By ஜி.ராதாகிருஷ்ணன்

கரூர்: கரூர் மாநகராட்சி கூட்டத்தில் காங்கிரஸ் கவுன்சிலர், இடைத்தேர்தல் குறித்து வாழ்த்து தெரிவித்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கரூர் மாநகராட்சி சாதாரண மற்றும் அவசரக்கூட்டம் மேயர் கவிதா தலைமையில் மாநகராடசி அலுவலக கூட்டரங்கில் இன்று (பிப். 28ம் தேதி) நடைபெற்றது. துணை மேயர் சரவணன், ஆணையர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சாதாரண கூட்டத்தில் 73, அவசர கூட்டத்தில் 24 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அவசரக்கூட்டத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு திமுக கவுன்சிலர்கள் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து பேசினர். அப்போது பேசிய காங்கிரஸ் கவுன்சிலர் ஸ்டீபன்பாபு, முதல்வருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தும், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றிக்கு பாடுபட்ட திமுக கவுன்சிலர்கள், காங்கிரஸ் வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிற அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு நன்றி என தெரிவித்தார்.

இதையடுத்து அதிமுக கவுன்சிலர்கள் சுரேஷ், தினேஷ் ஆகியோர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் முன்பு எப்படி வெற்றி வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்ததாக கூறலாம் எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து இரு தரப்பினரும் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதிமுக கவுன்சிலர்கள் கூறிய சில கருத்துகளுக்கு மேயர் கவிதாவும் எதிர்ப்பு தெரிவித்தார். நீண்ட வாக்குவாதங்களுக்கு பிறகு கூட்டம் முடிவுக்கு வந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE