புதுச்சேரி: காலாப்பட்டில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தின் 29-வது பட்டமளிப்பு விழா அம்பேத்கர் நிர்வாக கட்டிடத்தில் உள்ள ஜவஹர்லால் நேரு அரங்கில் இன்று நடைபெற்றது.
பல்கலைக்கழக துணை வேந்தர் குர்மீத் சிங் தலைமை தாங்கினார். புதுச்சேரி அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய் ஜெ. சவரணன்குமார், எம்எல்ஏ கல்யாணசுந்தரம், எம்பிக்கள் வைத்திலிங்கம், செல்வகணபதி, ஜிப்மர் இயக்குநர் ராகேஷ் அகர்வால் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கினர்.
விழாவில் அமைச்சர் நமச்சிவாயம் பேசியதாவது: புதுச்சேரி பல்கலைக்கழகம் நமது மாநிலத்துக்கு பெருமையைத் தேடித்தரக்கூடிய நிலையில் திகழ்ந்து கொண்டிருக்கிறது. புதுச்சேரி மாநிலத்தை கல்வி கேந்திரமாக உருவாக்க வேண்டும் என்பது தான் அரசின் எண்ணம். அதற்காக புதுச்சேரி அரசும், மத்திய அரசும் நிதியை ஒதுக்கி பல்வேறு நிலைகளில் செயல்படுத்தி வருகிறது.
கல்வியின் தரத்தை மேம்படுத்த வேண்டும், மாணவர்களுக்கு உரிய வசதி வாய்ப்புகளை உருவாக்கி கொடுக்க வேண்டும் என்று புதுச்சேரி மாநிலத்தின் சென்ற நிதிநிலை அறிக்கையில் ரூ.1,100 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பல்வேறு நிலைகளில் அந்த நிதி செலவிடப்பட்டு வருகிறது. மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் நம்முடைய மாநிலத்துக்கும், நமது பல்கலைக்கழத்துக்கும் தேவையான நிதியை ஒதுக்கி கொடுத்துக்கொண்டிருக்கிறார். பிரதமர் நரேந்திரமோடி கல்வியில் மாணவர்கள் சிறப்பான நிலையை அடைய வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் புதிய கல்வி கொள்கையை கொண்டு வந்து உருவாக்கி வருகின்றார்.
» கும்மிருட்டில் மூழ்கிக் கிடக்கும் மதுரை சாலைகள்: வெளிச்சம் கொடுக்குமா மாநகராட்சி?
» “நீட் தேர்வு விலக்கு குறித்து கோரிக்கை வைத்தேன்” - பிரதமர் மோடியை சந்தித்த உதயநிதி தகவல்
இன்றைக்கு மாறி வருகின்ற உலகம், நாட்டின் சூழ்நிலைக்கு ஏற்ப கல்வியை மாணவர்களுக்கு போதிக்க வேண்டியது என்பது அவசியமாக ஒன்றாக இருந்து கொண்டிருக்கின்றது. போட்டி, பரபரப்பு நிறைந்த உலகில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அப்படி போட்டி, பரபரப்பு நிறைந்த உலகில் வாழ வேண்டும் என்றால், நம்மை நாம் நிலை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றால், இதைப்போன்ற கல்வியை நாம் கற்க வேண்டியதன் அவசியம் ஏற்பட்டிருக்கிறது.
அதற்காகத் தான் பிரதமர் புதிய கல்விக்கொள்கையை நமது நாட்டில் கொண்டு வந்து மாற்றங்களை செய்து கொண்டு வருகிறார். புதுச்சேரியில் கல்வியை கொடுப்பது மட்டுமல்லாமல், வேலை வாய்ப்புகளையும் உருவாக்கி கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அத்தனை முன்முயற்சிகளையும் எடுத்து வருகிறது.
நீங்கள்(மாணவர்கள்) பெற்றுள்ள இந்த பட்டமானது நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக இருக்க வேண்டும். நாட்டின் குடிமகன் வளர்ந்தால் தான் நாடு வளர்ந்ததாக அர்த்தம். இன்றைக்கு நமது நாடு உலக நாடுகளுடன் போட்டிபோட்டு முன்னேறக்கூடிய சூழ்நிலையில் இருக்கிறது. நமது நாட்டை வல்லரசு நாடாக உருவாக்க வேண்டும் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் கனவு கண்டார். அந்த கனவை நிறைவேற்ற வேண்டும் என்றால், ஒவ்வொரு குடிமகனும் உழைத்தாக வேண்டும். அவ்வாறு உடைத்தால்தான் வல்லசு நாடாக உருவாக்க முடியும். அதற்கான முயற்சியை பிரதமர் எடுத்துக்கொண்டிருக்கிறார். எனவே கல்வி அறிவை நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும்.’’ என்றார்.
இந்த பட்டமளிப்பு விழாவில் ஆராய்ச்சிப் பட்டம் 278 பேருக்கும், இளநிலை, முதுநிலையில் தங்கப்பதக்கம் பெற்ற 126 பேருக்கும் பட்டச் சான்றும், பாராட்டுப் பதக்கமும் வழங்கப்பட்டன. இந்த விழாவின் மூலம் பல்கலைக்கழகம், இணைப்பு கல்லூரிகள், தொலைதூர கல்வி மாணவர்கள் என மொத்தாக 32,226 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டன.
ஆளுநர், முதல்வர் பங்கேற்கவில்லை: பட்டமளிப்பு விழாவில் இந்திய நாட்டின் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அவரது புதுச்சேரி வருகை திடீரென ரத்தானது. இதையடுத்து திட்டமிட்டபடி பட்டமளிப்பு விழா நடக்கும் எனவும், ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் கலந்து கொண்டு பட்டம் வழங்க உள்ளனர் எனவும் பல்கலை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் இன்று நடந்த விழாவில் ஆளுநர், முதல்வர் இருவரும் பங்கேற்கவில்லை.
ஆவேசமடைந்த எம்எல்ஏ: விழாவில் ஆராய்ச்சிப் பட்டங்களை சிறப்பு விருந்தினரான ஜிப்மர் இயக்குநர் ராகேஷ் அகர்வால் வழங்கி கொண்டிருந்தார். அப்போது திடீரென எழுந்த சட்டப்பேரவை உறுப்பினர் கல்யாணசுந்தரம், மக்கள் பிரதிநிதிகளை மதிக்காமல் விழா நடத்தப்படுகிறது. அழைப்பிதழில் பெயர் இல்லாத ஜிப்மர் இயக்குநருக்கு தரும் முக்கியத்துவம் அமைச்சர்களுக்கு அளிக்கவில்லை என மேடையிலேயே ஆவேசமாக கேள்வி எழுப்பினார். பல்கலை துணைவேந்தர் குர்மீத்சிங், பொறுத்திருக்குமாறு கேட்டுக்கொண்டதுடன், இதற்கெல்லாம் பதில் கூறமுடியாது என்றார். தொடர்ந்து அமைச்சர்கள், எம்பிக்கள் எம்எல்ஏவை சமாதானப்படுத்தி அமர செய்தனர். தொடர்ந்து பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
31 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago