தமிழர் வரலாற்று அடையாளங்களை மீட்க முதல்வர் ஸ்டாலின் செயல்படுத்திய 5 திட்டங்கள் - ஒரு பார்வை 

By செய்திப்பிரிவு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு தமிழின் தொன்மையையும், தமிழரின் பண்பாட்டையும் அறிவியல்பூர்வமாக நிறுவ அனைத்து வகையான பணிகளையும் செய்து வருகிறது. இதில் முக்கியமானது, கீழடி அகழ் வைப்பக அருங்காட்சியகம். கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருள்களைக் காட்சியகப்படுத்திட உலகத் தரம் வாய்ந்த நவீன வசதிகளுடன் கூடிய அருங்காட்சியகம் (Museum) ரூ.11.03 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இதை முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் திறந்து வைக்கவுள்ளார்.

கீழடியைத் தொடர்ந்து தமிழகத்தில் 7 இடங்களில் தொல்லியல் அகழாய்வுகள் மற்றும் சங்ககாலக் கொற்கைத் துறைமுகத்தை அடையாளம் காண முன்களப் புல ஆய்வுகளை மேற்கொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்படி சிவகங்கை மாவட்டம் கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்கள் (எட்டாம் கட்டம்), தூத்துக்குடி மாவட்டம் சிவகளை (மூன்றாம் கட்டம்), அரியலூர் மாவட்டம் கங்கைகொண்டசோழபுரம் (இரண்டாம் கட்டம்), கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறை (இரண்டாம் கட்டம்), விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை (முதல் கட்டம்), திருநெல்வேலி மாவட்டம் துலுக்கர்பட்டி (முதல் கட்டம்), தருமபுரி மாவட்டம் பெரும்பாலை (முதல் கட்டம்) உள்ளிட்ட இடங்களில் தொல்லியல் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதைத் தவிர்த்து, தமிழர்களின் கலைகளை பறைசாற்றும் நிகழ்ச்சிகளை தமிழகம் முழுவதும் கடந்த ஜனவரி மாதம் தமிழக அரசு நடத்தியது. இதில் சென்னையில், ஜனவரி 13-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை சென்னை சங்கமம் - நம்ம ஊர் திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 3 நாட்கள் சென்னையில் உள்ள பூங்கா மற்றும் விளையாட்டு திடல்கள் என்று 16 இடங்களில் தமிழர்களின் கலைகளை பறைசாற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

தமிழர்களின் கலைகளைப் போன்று தமிழர்களின் விளையாட்டுகளான கபடி, சிலம்பத்திற்கும் தமிழக அரசு சிறப்பு முக்கியத்துவம் அளித்து வருகிறது. தமிழக முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் கபடி, சிலம்பம் போன்ற விளையாட்டுகள் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும், தமிழகத்தில் உள்ள பழங்குடியினர் விளையாட்டுக்கள் கண்டறிந்து, அவற்றுக்கு ஊக்கம் அளித்திடவும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது.

விளையாட்டு திருவிழாக்களில் தமிழர்களின் விளையாட்டுகளை இடம்பெற வைத்த தமிழக அரசு, மறுபக்கம் இலக்கிய திருவிழாக்கள் மூலம் தமிழர்களின் வரலாற்று அடையாளங்கள் அடுத்த தலைமுறையிடம் கொண்டு சேர்க்கும் பணியை செய்து வருகிறது. சென்னை இலக்கிய திருவிழா, சிறுவாணி இலக்கிய திருவிழா, பொருநை இலக்கிய திருவிழா, வைகை இலக்கிய திருவிழா, காவிரி இலக்கிய திருவிழா உள்ளிட்ட 5 இலக்கியத் திருவிழாக்களைத் தமிழக அரசு நடத்திவருகிறது.

இலக்கிய திருவிழாக்களின் அடுத்தகட்டமாக, அறிவுசார் சமூகத்தை வார்த்தெடுக்கும் இலக்குடன் முதல் முறையாக அனைத்து மாவட்டங்களிலும் தமிழக அரசு சார்பில் புத்தக கண்காட்சி நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இவற்றை நடந்த தமிழக அரசு ரூ. 4.96 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. தற்போது வரை பல மாவட்டங்களில் இந்த புத்தகக் காட்சிகள் நடந்து முடிந்துள்ளது.

இதுபோன்று முதல் முறையாக சர்வதேசப் புத்தகக் கண்காட்சியை தமிழக அரசு நடத்தியது. இந்த சர்வதேசப் புத்தகக் கண்காட்சிக்கு, முதல்வர் ரூ.6 கோடி ஒதுக்கினார். மேலும், 10 இந்திய மொழிகள், 10 உலக மொழிகளில் தமிழ் நூல்களை மொழிபெயர்ப்பதற்கான மொழிபெயர்ப்பு நல்கையாக ரூ.1 கோடி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஒப்பந்தம் கையெழுத்தாவதில் தொடங்கி நூல் வெளியீடு வரை படிப்படியாக இந்த நல்கை சம்பந்தப்பட்ட பதிப்பாளர், மொழிபெயர்ப்பாளருக்கு வழங்கப்படுகிறது.

இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாறு, இனி தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் தொடங்கி எழுதப்பட வேண்டும் என்பதைச் சான்றுகளின் அடிப்படையில் அறிவியல்பூர்வமாக நிறுவுவதற்கு உள்ளூர் தொடங்கி உலகம் வரை பல்வேறு திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது .

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்