வணிக பெயர் பலகைகளை ஒரு மாதத்துக்குள் தமிழில் மாற்ற வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

திருச்சி: வணிக நிறுவன பெயர் பலகைகளை ஒரு மாதத்துக்குள் தமிழில் மாற்ற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளையின் சார்பில் ‘தமிழைத் தேடி’ என்ற விழிப்புணர்வு பரப்புரை பிரச்சாரத்தை அந்த அமைப்பு மற்றும் பாமக நிறுவனரான ராமதாஸ் மேற்கொண்டு வருகிறார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக்க வேண்டும், பள்ளிகளில் தமிழ்தான் கட்டாய பயிற்று மொழி உள்ளிட்ட 12 கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையிலிருந்து மதுரை வரை 8 நாட்கள் நடைபெறும் இந்த பயணத்தின் 7-ம் நாளான நேற்று, திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் பிரச்சார கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளைத் தலைவர் கோ.க.மணி தலைமை வகித்தார். பாமக மாவட்டச் செயலாளர் க.உமாநாத் வரவேற்றார். பாவாணர் தமிழியக்க அமைப்பாளர் கு.திருமாறன், உலக திருக்குறள் பேரவைத் துணைத் தலைவர் சு.முருகானந்தம், திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கத் தலைவர் ஜவஹர் ஆறுமுகம் வாழ்த்துரை வழங்கினர்.

நிகழ்ச்சியில், ராமதாஸ் பேசியது: இன்று உலகில் 7,105 மொழிகளும், இந்தியாவில் 880 மொழிகளும் பயன்பாட்டில் உள்ளன. அதில் 2,000 மொழிகளை 1,000-க்கும் குறைவானோர் மட்டுமே பேசுகின்றனர். இந்தியாவில் கடந்த 50 ஆண்டுகளில் 220 மொழிகள் அழிந்து விட்டதாக ஆய்வு தெரிவிக்கிறது.

சொந்த மக்களால் கைவிடப்படுதல், ஆதிக்க மொழிகளால் கழுத்து நெரிக்கப்படுதல், பயன்படுத்தாமல் ஒதுக்கி வைத்தல், தாய்மொழியை மதிப்பு குறைந்ததாக நினைத்தல் ஆகிய 4 காரணங்களே இந்த அழிவுக்கு காரணமாக கூறப்படுகிறது. நம் மொழியும் அதை நோக்கியே செல்கிறது. நாம் தினமும் 100 வார்த்தைகள் பேசினால் அதில் 5 வார்த்தைகள் மட்டுமே தமிழில் உள்ளன.

அந்த 5 வார்த்தைகளும் கொச்சை தமிழாகவே உள்ளன. இதை மாற்ற வேண்டியது நமது கடமை. அதன் ஒரு நடவடிக்கையாக, தமிழகத்தில் உள்ள வணிகர்கள் தங்கள் கடை, நிறுவனங்கள் உள்ளிட்டவற்றின் பெயர் பலகையை தமிழில் எழுதுங்கள். இதற்கான சட்டமும் உள்ளது. 10 பங்கு உள்ள ஒரு பலகையில் 5 பங்கு தமிழ் மொழியிலும், 3 பங்கு ஆங்கிலத்திலும், 2 பங்கு உங்கள் விருப்ப மொழியிலும் இருக்க வேண்டும்.

ஆகவே இந்த சட்டத்தை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். ஒரு மாதத்துக்குள் வணிக பெயர் பலகைகள் தமிழில் மாற்றப்படாவிட்டால், கருப்பு மை கலந்த வாளியைத் தூக்கிக்கொண்டு நாங்கள் தமிழகம் முழுவதும் படை எடுப்போம். அப்படி ஒரு நிலையை உருவாக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE