ஈரோடு கிழக்கு வாக்குப்பதிவும், வகை வகையான புகார்களும் - ஒரு பார்வை

By செய்திப்பிரிவு

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் வாக்களிக்க வந்தவர்களின் ஆதார் அட்டையை, ஆவணமாக ஏற்க தேர்தல் அதிகாரிகள் மறுத்ததால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நேற்று காலை முதல் விறுவிறுப்பாக நடந்தது. தேர்தல் தொடர்பாக ஆங்காங்கே நடந்த சம்பவங்கள் விவரம்:

* வீரப்பன் சத்திரம் பகுதியில், 45-வது வாக்குச்சாவடி மையத்தில் ஒரு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் பழுதடைந்ததால், சில நிமிடங்கள் வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டது. பழுது சரி செய்யப்பட்ட பின்பு வாக்குப் பதிவு நடந்தது.

* ஈரோடு பழைய ரயில் நிலையம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் இரட்டை இலைக்கு வாக்களித்தால், கை சின்னத்தில் வாக்கு பதிவாகிறது எனக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து ஈரோடு மாவட்ட அதிமுக செயலாளர் கே.வி.ராமலிங்கம் அங்கு சென்று தேர்தல் அலுவலரிடம் புகார் செய்தார். உடனடியாக வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டு, இயந்திரங்கள் சரியாக இயங்குகிறதா என்பதை சரி பார்த்த பின்பு அங்கு வாக்குப்பதிவு தொடர்ந்தது.

* சில வாக்குச் சாவடிகளில் வாக்காளர்களின் விரல்களில் வைக்கப்பட்ட மை அழிவதாக புகார் எழுந்தது. அதனை மறுத்த தேர்தல் நடத்தும் அலுவலர் க.சிவகுமார், இதுபோன்ற புகார் எதுவும் வரவில்லை எனத் தெரிவித்தார்.

* ஈரோடு கச்சேரி வீதியில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களிக்க தேவையான ஆவணமாக ஆதார் அட்டையை எடுத்து வந்த வாக்காளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், அதிருப்தியடைந்த வாக்காளர்கள் திரும்பிச் சென்றனர். இத்தகவல் தேர்தல் அலுவலர்கள் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட பின், ஆதார் அட்டை கொண்டு வந்தாலும், வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

* ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்குரிமை உள்ள வெளியூர்களில் வசித்து வந்த வாக்காளர் பலர் நேற்று வாக்களித்தனர். கேரளா, பெங்களூரு, சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வரவழைக்கப்பட்ட வாக்காளர்கள் வாக்களித்தனர். அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு போக்குவரத்து செலவினை திமுகவினர் வழங்கினர்.

* ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு அதிமுக கொடியின் வண்ணத்திலான சால்வை மற்றும் வேட்டி அணிந்து வந்ததால், அவருக்கு வாக்குச் சாவடியில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. அதன்பின் கட்சிக் கொடி வண்ணம் இல்லாத வேட்டி அணிந்து அவர் வாக்களித்தார். அதேபோல், தேமுதிக வேட்பாளர் ஆனந்திற்கும் கட்சி கொடி போட்ட வேட்டி அணிந்து வர அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து அவர் பேண்ட் அணிந்து வந்து வாக்களித்தார்.

* ராஜாஜிபுரம் காமராஜர் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு தாமதமான நிலையில், வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை எனக் கூறி எஸ்டிபிஐ கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் சமாதானப் படுத்தினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE