கல்லணை கால்வாயில் 3-ம் கட்ட புனரமைப்பு பணிகள் தீவிரம்: ஜூன் மாதத்துக்குள் முடிக்க திட்டம்

By செய்திப்பிரிவு

தஞ்சாவூர்: ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் நிதி உதவியுடன், கல்லணைக் கால்வாயில் 3-ம் கட்ட புனரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வரும் ஜூன் மாதம் பாசனத்துக்காக தண்ணீர் திறக்கும் முன் பணிகளை முடிக்க இரவு பகலாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையிலிருந்து பூதலூர், தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி வழியாக புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதி வரை 148 கி.மீ தொலைவுக்கு கல்லணைக் கால்வாய் செல்கிறது. மேலும், 636 கி.மீ தொலைவுக்கு கிளை வாய்க்கால்களும், 694 நீர்ப்பிடிப்பு ஏரிகளும் உருவாக்கப்பட்டன. இதன் மூலம் 2.27 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.

நாளடைவில் இக்கால்வாயில் கரைகள் பலவீனமடைந்ததால், ஆங்காங்கே கரைகளில் உடைப்பு ஏற்பட்டு வந்தது. இதனால், கடைமடை பகுதியான பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி பகுதிகளில் ஆண்டுதோறும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதையடுத்து, கல்லணை கால்வாயை முறையாக புனரமைப்பு செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து, கல்லணைக் கால்வாயை 16 தொகுப்புகளாக புனரமைப்பு செய்ய, ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி நிதியுதவியுடன் ரூ.2,639.15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 3 ஆண்டுகளுக்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டது. இந்தப் பணிகளை கடந்த 2021 பிப்.14-ம் தேதி பிரதமர் மோடி சென்னையில் தொடங்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து கல்லணைக் கால்வாயில் 2021-ம் ஆண்டு 5 தொகுப்புகள் சீரமைக்கப்பட்டன. இதில் ஆற்றுக்குள் சிமென்ட் தளம் அமைத்தல், கரையை பலப்படுத்துதல், இடது கரையில் சாலைகள் அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 2022-ல் மேலும் 5 தொகுப்புகள் இடம்பெற்றன.

இந்தப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே, கடந்தாண்டு மே மாத இறுதியில் பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டதால், பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து கடந்த 2 தொகுப்புகளிலும் விடுபட்ட பணிகளும், இந்தாண்டுக்கான மீதமுள்ள 6 தொகுப்புகளுக்கான புனரமைப்பு பணிகளும் தற்போது தொடங்கியுள்ளன.

இதுகுறித்து பொதுப்பணித்துறை கல்லணை கால்வாயின் செயற்பொறியாளர் பாண்டி கூறும்போது, ‘ஜூன் மாதம் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கும் முன் இப்பணிகளை முடிக்க வேண்டும் என்பதால் அதற்கேற்றார்போல் புனரமைப்பு பணிகளை துரிதப்படுத்தியுள்ளோம்’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE