ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் கடைசி நேரத்தில் திமுக மற்றும் அதிமுகவினரின், ‘டோக்கன்’ விநியோகம் காரணமாக வாக்கு சதவீதம் கணிசமாக அதிகரித்துள்ளதாக அரசியல் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
தமிழக சட்டப்பேரவைத் தொகுதிகளில் 98-வது தொகுதியாக இடம்பெற்றுள்ள ஈரோடு கிழக்கு தொகுதி, கடந்த 2008-ம் ஆண்டு நடந்த தொகுதி மறுசீரமைப்பின் போது உருவாக்கப்பட்டது.
அதன்பின் 2011-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரும், 2016-ம் ஆண்டு நடந்த தேர்தலில் தற்போதைய அதிமுக வேட்பாளரான கே.எஸ். தென்னரசுவும் வெற்றி பெற்றனர். கடந்த 2021- ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுக கூட்டணியில், தமாகா சார்பில் போட்டியிட்ட யுவராஜை, 8,904 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்து, காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈவெரா வெற்றி பெற்றார்.
கடந்த ஜனவரி மாதம் 4-ம் தேதி உடல்நலக்குறைவால் திருமகன் ஈவெரா காலமானதையடுத்து, ஈரோடு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, நேற்று வாக்குப்பதிவு நடந்துள்ளது. ஈரோடு மாநகராட்சியின் 33 வார்டுகளை உள்ளடங்கிய ஈரோடு கிழக்கு தொகுதியில், கடந்த 2011-ம் ஆண்டு 77.60 சதவீதமும், 2016-ம் ஆண்டு 69.57 சதவீதமும், 2021-ம் ஆண்டு தேர்தலில் 66.56 சதவீத வாக்குகளும் பதிவாகின.
» டென்னிஸ் தரவரிசை பட்டியல் - 378 வாரங்களாக முதலிடம் பிடித்து நோவக் ஜோகோவிச் சாதனை
» எம்எல்ஏ கொலையில் சாட்சியை சுட்டுக்கொன்ற முக்கிய குற்றவாளி என்கவுன்ட்டரில் உயிரிழப்பு
திமுக - அதிமுக பலப்பரீட்சை: இந்நிலையில் நேற்று நடந்த இடைத்தேர்தலில், 74.69 சதவீத வாக்குகள் பதிவானதாக அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்து இரண்டாண்டுகள் நிறை வடையும் நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் என்பது ஆட்சிக்கான சான்றிதழாகவும், அடுத்த ஆண்டு நடக்கும் மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டமாகவும் இருக்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கருதினார். அதனால், ஏறக்குறைய அனைத்து அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகளையும் தேர்தல் பணியில் திமுக ஈடுபடுத்தியது.
அதேபோல், அதிமுக தரப்பில் ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கு தீர்வு காணும் வகையில் இரட்டை இலை சின்னம் பெற்று தனது பலத்தை நிருபிக்க எதிர்கட்சித்தலைவர் பழனிசாமி விரும்பினார். இதன் காரணமாக் இரு கட்சியினரும், வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்களை வழங்கியதோடு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.இதன் பலனாக ஈரோடு கிழக்கு தொகுதியில் 74.69 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
’டோக்கன்’ விநியோகம் காரணம்: வாக்குப்பதிவிற்கான நாள் நெருங்கிய நிலையில், இருபிரதான கட்சிகளும், ‘டோக்கன்’ விநியோகத்தில் ஈடுபட்டன. தேர்தலில் தங்கள் கட்சி வெற்றி பெற்ற பின், இந்த டோக்கனைக் கொடுத்து பணம் மற்றும் பரிசுப்பொருள் பெற்றுக் கொள்ளலாம் என வாக்காளர்களுக்கு ஆசை காட்டப்பட்டது.
இதன் காரணமாக, வாக்குசாவடிகளில் வாக்களித்து முடிந்தவுடன், திமுக மற்றும் அதிமுக சார்பில் தேர்தல் பணியில் ஈடுபட்டு இருந்தவர்களிடம், தாங்கள் வாக்களித்ததை வாக்காளர்கள் பலர் உறுதி செய்து விட்டு சென்றனர். வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு வரவழைக்க இரு கட்சிகளும் போட்ட திட்டத்தின் பலனாக வாக்கு சதவீதம் கணிசமாக அதிகரித்துள்ளது.
முதல்வர் ஆர்வம்: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என விரும்பிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அமைச்சர்களில் தொடங்கி, வாக்குச்சாவடி பணியில் உள்ள கட்சி நிர்வாகி வரை தொடர்பு கொண்டு பலமுறை பேசியுள்ளார்.
இதன் தொடர்ச்சியாக, நேற்று வாக்குப்பதிவு நிலவரம் குறித்து, திமுக வார்டு செயலாளர் மற்றும் கவுன்சிலர்களை, முதல்வர் மு.க. ஸ்டாலின் போனில் தொடர்பு கொண்டு விசாரித்துள்ளார். இதனால், திமுகவினர் நேற்று உற்சாகத்துடன் தேர்தல் பணியில் ஈடுபட்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago