தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக குஷ்பு நியமனம் - அண்ணாமலை, சீமான் வாழ்த்து

By செய்திப்பிரிவு

சென்னை: தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ள குஷ்புவுக்கு, அண்ணாமலை, சீமான் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய குஷ்பு, 2020-ல் பாஜகவில் இணைந்தார். 2021-ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஆயிரம்விளக்கு தொகுதியில் போட்டியிட்டு, தோல்வியைத் தழுவினார். பின்னர், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் பதவி குஷ்புவுக்கு வழங்கப்பட்டது.

தொடர்ந்து போராடி வருகிறேன்

இந்நிலையில், குஷ்பு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் குஷ்பு கூறியதாவது: நான் எப்போதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக குரல் கொடுத்து வருகிறேன். பெண்களின் உரிமைகளுக்கும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறேன். பெண்களின் சுயமரியாதைக்காக தொடர்ந்து போராடி வருகிறேன்.

பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்கு குரல் கொடுக்க தற்போது எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. பெண்கள் பயமின்றி, தங்களுக்கு நேரும் பாதிப்புகளைக் கூற வேண்டும். உங்களுக்கு குரல் கொடுக்கநான் இருக்கிறேன். எப்போது வேண்டுமானாலும் என்னைத் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில், குஷ்புவுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை: தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள குஷ்புவுக்கு தமிழக பாஜக சார்பில் வாழ்த்துகள்.பெண்களின் உரிமைக்கான அவரது விடாமுயற்சி மற்றும் போராட்டத்துக்கான அங்கீகாரம் இது.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்: தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள, பாஜக தேசியசெயற்குழு உறுப்பினர் குஷ்புவுக்கு வாழ்த்துகள். எதையும் நேர்த்தியாக, திறம்படச் செய்வீர்கள் என்பதை நான் அறிவேன். அதைப்போல, இந்தப் பொறுப்பையும் நிறைவேற்றுவீர்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE