சேலத்தில் அண்ணாமலை கொடும்பாவியை எரிக்க முயன்ற விசிகவினர்

By வி.சீனிவாசன்

சேலம்: சேலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை அவதூறாக பேசியதாக, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் தடா பெரியசாமியை கைது செய்ய வலியுறத்தி சாலைமறியல் போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஈடுபட்டனர். மேலும், பாஜக தலைவர் அண்ணாமலை கொடும்பாவியை விசிக-வினர் எரிக்க முயன்றதை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

விசிக தலைவர் திருமாவளவனை அவதூறாக பேசிய, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் தடா பெரியசாமியை கைது செய்ய வலியுறத்தி சேலம் ஒருங்கிணைந்த விசிக சார்பில் பேரணி மற்றும் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று காலை விசிக -வினர் சேலம் அண்ணா பூங்கா அருகில் திரண்டனர். அவர்களை மாநகர காவல் துணை ஆணையர் மாடசாமி தலைமையிலான போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

இதனால், விசிக-வினருக்கும், போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் அவர்கள், அண்ணா பூங்கா அருகில் இருந்து பேரணியாக பெரியார் மேம்பாலத்தில் சென்றபோது, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கொடும்பாவியை எரிக்க முயற்சித்தனர். அப்போது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் கொடும்பாவியை விசிக-வினரிடம் இருந்து பறித்து போராட்டத்தை தடுத்து நிறுத்தினர்.

தொடர்ந்து சேலம் ஆட்சியர் அலுவலக ரவுண்டானா அருகே திரண்ட விசிக-வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீஸார் தடுத்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர். ஆனாலும், மண்டல செயலாளர் நவரசன் தலைமையிலான விசிக-வினர், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் தடா பெரியசாமியை கண்டித்து முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE