இந்திய எல்லைக்குள் நுழைந்து தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்: அன்புமணி கண்டனம்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழக மீனவர்கள் மீது கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்ட இலங்கைக் கடற்படையினரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று தனது ட்விட்டர் பதிவுகளில் கூறியுள்ளதாவது: ''வங்கக்கடலில் கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். மீன் உள்ளிட்ட உடைமைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது.

கடந்த 24-ஆம் தேதி வங்கக்கடலில் மீன்பிடித்த தரங்கம்பாடி மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்தினார்கள். அதனால் ஏற்பட்ட அச்சமும், பதற்றமும் விலகுவதற்கு முன்பாகவே அடுத்த தாக்குதல் நடந்துள்ளது. இதில் 11 பேர் காயமடைந்துள்ளனர். இதை சகித்துக் கொள்ள முடியாது.

தமிழக மீனவர்கள் தாக்கப்பட்ட இரு நிகழ்வுகளும் இந்திய கடல் எல்லைக்குள் தான் நடந்துள்ளன. மீனவர்கள் எல்லை தாண்டினால் கூட அவர்களைத் தாக்கும் அதிகாரம் இலங்கை கடற்படைக்கு இல்லை. அத்தகைய சூழலில் இந்திய எல்லைக்குள் நுழைந்து தாக்கியதை இந்தியா வேடிக்கைப் பார்க்கக்கூடாது.

தமிழக மீனவர்களைத் தாக்கிய இலங்கைக் கடற்படையினர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும். இது தொடர்பாக இந்தியாவுக்கான இலங்கைத் தூதரை மத்திய அரசு நேரில் அழைத்து கண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.'' இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE