ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வெப் கேமரா மூலம் தலைமைத் தேர்தல் அதிகாரி கண்காணிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு , தலைமைச் செயலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணித்து வருகிறார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று (பிப்.27) காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்னதாகவே மக்கள் வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். இத்தேர்தலில் வாக்களிக்க 2.27 லட்சம் வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர். காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

காலை 11 மணி வரை 27.89% வாக்குப்பதிவாகி உள்ளது. இதன்படி கடந்த 4 மணி நேரத்தில் 32,562 ஆண்கள் மற்றும் 30,907 பெண்கள் என்று மொத்தம் 63,469 வாக்காளர்கள் தங்கள் ஜனநாயகக் கடமையாற்றியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், கையில் வைக்கப்படும் மை அழிவது, வாக்குச்சாவடிகள் அருகே திமுக பணப்பட்டுவாடா என்று அதிமுக சார்பில் தொடர்ந்து புகார் அளிக்கப்பட்டுவருகிறது. மேலும் வாக்குச்சாவடியில் அடிப்படை வசதி இல்லை என்று தெரிவித்து வாக்காளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, சென்னையில் தலைமைச் செயலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணித்து வருகிறார். வெப் கேமரா மூலமாக வாக்குச்சாவடிகளை நேரடியாக அவர் கண்காணித்து வருகிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE