அரசு பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கு வயது வரம்பு நிர்ணயத்தில் திடீர் உத்தரவு- 35 வயதுக்கு மேல் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாததால் பாதிப்பு

By செய்திப்பிரிவு

அரசு பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கு, திடீரென வயது வரம்பு 35 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 35 வயது கடந்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க முடியாது என்பதால் பட்டதாரிகள் அதிர்ச்சியும், பாதிப்பும் அடைந்துள்ளனர்.

அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், முதுகலை பட்டதாரி ஆசிரியர் உள்பட அனைத்து ஆசிரியர் பணியிலும் 57 வயது வரை சேரலாம். அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணிக்கும் இதே வயது வரம்புதான் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அரசு பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கும், அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் பணிக்கும் இதுநாள் வரை 57 வயது என்றுதான் வயது வரம்பு இருந்து வந்தது. இந்த நிலையில், 35 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டுமே அரசு பொறியியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியில் சேர முடியும் என்று அரசு அறிவித்துள்ளது.

139 காலி இடங்களுக்கு தேர்வு

அரசு பொறியியல் கல்லூரிகளில், பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத பாடப் பிரிவுகளில் (ஆங்கிலம், கணிதம், இயற்பியல்) 139 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கலை அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர் நியமனம் போல் இல்லாமல், போட்டித் தேர்வு அடிப்படையில் இந்த காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான எழுத்துத் தேர்வு அக்டோபர் 26-ம் தேதி நடத்தப்பட உள்ளது. பொறியியல் பாட உதவி பேராசிரியர் பணிக்கு எம்.இ. அல்லது எம்.டெக். பட்டதாரிகளும், பொறியியல் அல்லாத பாடப் பிரிவுகளுக்கு முதுநிலை பட்டப் படிப்புடன் ‘ஸ்லெட்’ அல்லது ‘நெட்’ தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

முதுநிலை பட்டதாரிகள் கடும் அதிர்ச்சி

பிஎச்.டி. முடித்திருந்தால் ஸ்லெட், நெட் தேர்ச்சி அவசியமில்லை. முதுநிலை படிப்பில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண் அவசியம். பொறியியல் பாடமாக இருந்தால் இளநிலை அல்லது முதுநிலை படிப் பில் ஏதாவது ஒன்றில் முதல் வகுப் பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத பாடங்கள் இரண்டுக்கும் வயது வரம்பு எஸ்சி, எஸ்டி, பிசி வகுப்பினர் உள்பட அனைவருக்கும் 35 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை அறிந்து முதுநிலை பட்டதாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அரசு பாலிடெக்னிக் மற்றும் அரசு பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் தேர்வை எதிர்பார்த்து காத்திருக்கும் இந்த பட்டதாரிகள் சிலர் கூறும்போது, ‘அரசு பள்ளி ஆசிரியர் பணிக்கும், அரசு கலை அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கும் வயது வரம்பு 57 ஆக இருக்கும் போது, பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் பதவிக்கு மட்டும் திடீரென வயது வரம்பு கொண்டு வந்திருப்பது எந்த வகையில் நியாயம்? இந்த தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுவது கிடையாது. எப்போதாவதுதான் நடைபெறும். பாலிடெக்னிக் விரிவுரையாளர் நியமனத்துக்கும் இதேபோல் வயது வரம்பு கொண்டு வரப்படுமோ என்று அஞ்சுகிறோம். வயது வரம்பு கட்டுப்பாட்டை அரசு நீக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தனர்.

ஆசிரியர் தேர்வு வாரியம் பதில்

இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘வயது வரம்பை தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம்தான் நிர்ணயித்துள்ளது. இதில் நாங்கள் ஒன்றும் செய்ய இயலாது’ என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE