முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி அனைத்து மாவட்டங்களிலும் மார்ச் 5 முதல் அதிமுக பொதுக்கூட்டங்கள்

By செய்திப்பிரிவு

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்த நாளை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் மார்ச் 5-ம் தேதி முதல் அதிமுக பொதுக் கூட்டங்கள் நடைபெற உள்ளன.

இது தொடர்பாக கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதிமுக அமைப்பு ரீதியாகச்செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்கு உட்பட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், கட்சி அமைப்புகள் செயல்படும் பிற மாநிலங்களிலும் மார்ச் 5, 6, 7, 10, 11, 12-ம் தேதிகளில் பொதுக் கூட்டங்கள் நடைபெற உள்ளன.

மார்ச் 5, 6, 7-ம் தேதிகளில் பொதுக்கூட்டம் நடைபெறும் இடங்கள், அதில் பங்கேற்றுப் பேசுவோர் விவரங்கள் அடங்கிய பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

மார்ச் 5-ம் தேதி சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் நான் (பழனிசாமி) பங்கேற்கிறேன். மார்ச் 10, 11, 12-ம் தேதிகளில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ள இடங்கள், அவற்றில் பேசுவோர் விவரங்கள் அடங்கிய பட்டியல் விரைவில் வெளியிடப்படும்.

கட்சி எம்எல்ஏக்கள், சார்பு அணிகளின் நிர்வாகிகள் ஆகியோர், தாங்கள் சார்ந்த தொகுதிகளில் நடைபெற உள்ள பொதுக் கூட்டங்களில் சிறப்புரை ஆற்றுவார்கள்.

மாவட்டச் செயலாளர்கள், தங்கள் மாவட்டத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ள பொதுக் கூட்டங்களை, எம்ஜிஆர் மன்றம், அம்மா பேரவை, எம்ஜிஆர் இளைஞரணி, மகளிரணி, மாணவரணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு,சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர், இளம் பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்பப் பிரிவு, வர்த்தக அணி, கலைப் பிரிவுநிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புபிரதிநிதிகளுடன் இணைந்துசிறப்பாக நடத்த வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE