145 கி.மீ நீளத்திற்கு ரூ.79 கோடியில் சாலைப் பணிகள்: சென்னை மாநகராட்சி திட்டம்

By கண்ணன் ஜீவானந்தம்

சென்னை: சென்னையில் 145 கி.மீ நீளத்திற்கு ரூ.79 கோடியில் சாலைப் பணிகளை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி டெண்டர் கோரியுள்ளது.

சென்னை மாநகராட்சியால் 387 கி.மீ நீளமுள்ள 471 பேருந்து சாலைகளும், 5270 கி.மீ. நீளமுள்ள 34,640 உட்புறச் சாலைகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. பருவமழையின் போது, சேதமடைந்த சாலைகளில் ஜல்லிக் கலவை (Wet Mix Macadam), தார்க்கலவை (Hot Mix) மற்றும் குளிர் தார்க்கலவை (Cold Mix) கொண்டு சீரமைக்கப்பட்டது. தற்போது நிறைவு பெற்ற நிலையில், சென்னையில் சாலைப் பணிகளை சென்னை மாநகராட்சி தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

இதில் சிங்கார சென்னை திட்டத்தில் 62.72 கி.மீ நீளமுள்ள 362 சாலைகள் ரூ.35 கோடி செலவிலும், தமிழ்நாடு நகர்புற சாலை மேம்பாட்டு நிதியின் கீழ் 41 கி.மீ நீளமுள்ள 249 சாலைகள் ரூ.18 கோடி செலவிலும், தமிழ்நாடு நகர்புற சாலை மேம்பாட்டு திட்ட 2022 - 23 நிதியில் 58 கி.மீ நீளமுள்ள 319 சாலைகள், ரூ.23 கோடி செலவிலும் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை வரும் திங்கள் (பிப்.27) முதல் தீவிரமாக மேற்கொள்ள சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

இதனைத் தொடர்ந்து 145 கி.மீ நீளத்திற்கு 751 சாலைகளை ரூ.79 கோடி செலவில் சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி டெண்டர் கோரியுள்ளது. இதன்படி மண்டலம் 4,5,6,9 மற்றும் 10வது மண்டலத்தில் உள்ள தார் சாலைகள், 14 வது மண்டலத்தில் உட்புற சிமெண்ட் சாலைகள் மற்றும் 23 உட்புற தார் சாலைகள், 2வது மண்டலத்தில் உட்புற தார் சாலைகள், 10 மண்டலத்தில் 7 உட்புற தார் சாலைகள் மற்றும் 3,5,6,7, 8 மற்றும் 9வது மண்டலத்தில் 23 பேருந்து தட சாலைகள் சீரமைக்கப்படவுள்ளது.

மேலும்,2,3,4,10,12,13 மற்றும் 14 வது மண்டலங்களில் உள்ள 20 உட்புற சிமென்ட் சாலைகள், 4,5,7,8,11,12,14 மற்றும் 15 வது மண்டலங்களில் உள்ள உட்புற கான்கிரீட் சிமென்ட் சாலைகள், 2,4,5,7,8,9,11,12,14 மற்றும் 15 ஆகிய மண்டலங்களில் உள்ள 481 உட்புற தார் சாலைகள், 4 மற்றும் 9 வது மண்டலத்தில் உள்ள 2 பேருந்து தட சாலைகள் உள்ளிட்ட பல்வேறு சாலைகளை சீரமைக்க சென்னை மாநகராட்சி டெண்டர் கோரியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE