டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வை ரத்து செய்ய வேண்டும்: அன்புமணி

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் இன்று நடைபெற்று வரும் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழகத்தில் இன்று நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தொகுதி இரண்டுக்கான முதன்மை தேர்வு ஏராளமான குளறுபடிகளுடன் மிகவும் தாமதமாக தொடங்கியுள்ளது. பல தேர்வு மையங்களில் வினாத்தாள்களின் பதிவு எண்கள் மாறியிருந்ததுதான் இக்குழப்பத்திற்கும் தாமதத்திற்கும் காரணமாகும்.

பல இடங்களில் தேர்வர்களுக்கு வினாத்தாள்கள் வழங்கப்பட்டு, அவற்றின் பதிவு எண்கள் தவறாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, பின்னர் திரும்ப பெறப்பட்டுள்ளது. இதன்மூலம் பல இடங்களில் வினாத்தாள் வெளியாகிவிட்டது. டிஎன்பிஎஸ்சியின் அலட்சியமே இதற்குக் காரணம்.

போட்டித் தேர்வுகளில் அனைவருக்கும் சமவாய்ப்பு வழங்கப்பட வேண்டும். தேர்வர்களுக்கு மன உளைச்சல், பதற்றம் இல்லாத சூழல் உறுதிப்படுத்தப்பட வேண்டும். ஆனால் இன்றைய தேர்வில் சமவாய்ப்பும் இல்லை, மன உளைச்சல் இல்லாத சூழலும் ஏற்படுத்தப்படவில்லை.

சமவாய்ப்பு அற்ற சூழலில் நடத்தப்படும் தேர்வுகளில் சமநீதி கிடைக்காது. எனவே இன்றைய தேர்வை உடனடியாக ரத்துசெய்துவிட்டு, அனைத்து குளறுபடிகளையும் களைந்துவிட்டு, வேறு ஒருநாளில், அமைதியான சூழலில் இத்தேர்வை டி.என்.பி.எஸ்.சி மீண்டும் நடத்தவேண்டும்." இவ்வாறு அந்த பதிவில் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE