உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து தற்போது மேற்கு வங்க மற்றும் தமிழக போலீஸாரால் தேடப்பட்டு வரும் நீதிபதி சி.எஸ்.கர்ணனின் வாழ்க்கைப் பயணம் பரபரப்புக்கு பஞ்சமில்லாததாக இருந்துள்ளது.
கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி யாக பதவி வகிக்கும் சி.எஸ்.கர்ணனின் இயற்பெயர் கருணாநிதி. கடந்த 1991-ல் தன்னுடைய பெயரை சின்னசாமி சுவாமிநாதன் கர்ணன் என அவரே மாற்றிக்கொண்டதாக கூறப்படுகிறது.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே உள்ள கர்ணநத்தம்தான் அவரது சொந்த ஊர். கடந்த 1955 ஜூ ன் 12-ம் தேதி பிறந்த கர்ணனின் தந்தை சுவாமிநாதன் குடியரசுத் தலைவரிடமிருந்து நல்லாசிரியர் விருது பெற்றவர். ஆனால் கர்ணனுக்கு ஆரம்பக் கல்வியை புகட்டியது அவரது தாயார் கமலம் அம்மாள்தான்.
மங்கலம்பேட்டை பேரூராட்சி உயர் நிலைப்பள்ளியில் பள்ளிப் படிப் பையும், விருத்தாச்சலம் கலைக் கல்லூரியில் ஓராண்டு புதுமுக வகுப்பையும், சென்னை புதுக்கல்லூரி யில் மூன்றாண்டு அறிவியல் பட்டப்படிப்பையும் முடித்த கர்ணன், அதன்பிறகு 1983-ல் சென்னை சட்டக்கல்லூரியில் மூன்றாண்டு சட்டம் பயின்று, அதே ஆண்டு வழக்கறிஞராகவும் பதிவு செய்தார்.
ஆரம்பத்தில் அரசியலில் தீவிரம் காட்டிய கர்ணன் 2001-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக பூத் ஏஜெண்டாக செயல் பட்டுள்ளார். அதன்பிறகு அதிமுகவில் இருந்து விலகி காங்கிரஸிலும் கால் பதித்துள்ளார்.
சுமார் 23 ஆண்டுகளாக உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக தொழில் புரிந்த கர்ணன், சிவில் வழக்குகளில் அதிகமாக வாதாடி வந்துள்ளார். சென்னை பெருநகர குடிநீர் வடிகால் வாரியத்தின் சட்ட ஆலோசகராகவும், தமிழக மற்றும் மத்திய அரசு வழக்கறிஞராகவும் பதவி வகித்துள்ளார். ஆனால் வெளிவட்டாரத்தில் கர்ணனின் முகம் அதிகம் தெரிய ஆரம்பித்தது 2005-ல் தான். வாழ்வில் படிப்படியாக உயர்ந்து கடந்த 2009 மார்ச் மாதம் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார். அன்று முதல் தற்போது வரை நீதிபதி கர்ணனின் தடாலடி நடவடிக்கைகளுக்கு பஞ்சமே இல்லை.
உயர் நீதிமன்றத்துக்கு புதிய நீதிபதிகள் தேர்வு தொடர்பான வழக்கை நீதிபதிகள் விசாரித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த கர்ணன், நீதிபதிகள் தேர்வில் வெளிப்படைத்தன்மை இல்லை எனக்கூறி பரபரப்பு ஏற்படுத்தினார். பின்னர் சிவில் நீதிபதிகள் நேர்முகத் தேர்வை டிஎன்பிஎஸ்சி நடத்தக்கூடாது என தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து தடை பிறப்பித்தார். ஆணும், பெண்ணும் திருமணம் செய்யாமல் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்தால், அவர்களை கணவன் மனைவியாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என அதிரடி தீர்ப்பு வழங்கினார்.
கடந்த 2015-ல் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்த எஸ்.கே.கவுல் மீது பனிப்போரைத் தொடுத்த கர்ணன், தான் ஒரு தலித் நீதிபதி என்பதால் தன்னை எஸ்.கே.கவுல் மற்றும் சக நீதிபதிகள் ஒதுக்கி வைப்பதாகக் கூறி அவர்கள் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க ஆணையத்துக்கு பரிந்துரைத்தார். மேலும் எஸ்.கே.கவுல் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நீதிபதிகள் மீது ஊழல் குற்றம் சுமத்தி ஜனாதிபதி மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, பிரதமர், சிபிஐ இயக்குநர் உள்ளிட்டோருக்கு புகார் கடிதம் அனுப்பினார்.
இதை நீதிமன்ற அவமதிப்பாக கருதிய உச்ச நீதிமன்றம், அவர் மீது தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இதன்காரணமாக அவரை கடந்த 2016 பிப்ரவரி மாதம் சென்னையில் இருந்து கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றம் செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த இடமாற்றத்துக்கு கடந்த 2016 பிப்ரவரி 15-ம் தேதி தனக்குத்தானே தடை விதித்து பரபரப்பு ஏற்படுத்திய கர்ணன், அன்று முதல் இன்று வரை உச்ச நீதிமன்றத்துக்கு எதிரான தனது உரசல் போக்கை தொடர்ந்து வருகிறார்.
2016 மார்ச் முதல் கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்து வரும் நீதிபதி சி.எஸ்.கர்ணன், வரும் ஜூன் 12-ம் தேதியோடு ஓய்வுபெற உள்ள நிலையில் உச்ச நீதிமன்றம் விதித்துள்ள 6 மாத சிறை தண்டனையால் சிறை செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 mins ago
தமிழகம்
24 mins ago
தமிழகம்
25 mins ago
தமிழகம்
51 mins ago
தமிழகம்
44 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago