“தேனி எம்.பி ரவீந்திரநாத் இப்போது அதிமுகவில் இல்லை” - ஜெயக்குமார்

By செய்திப்பிரிவு

சென்னை: "தேனி எம்.பி. ரவீந்திரநாத் ஓபிஎஸ்ஸின் மகன். அவர் எப்படி அவருடைய அப்பாவை விட்டுவிட்டு பிரிந்து வருவார்? எனவே, அவரும் அதிமுகவில் இல்லை. இதுதொடர்பாக ஏற்கெனவே நாடாளுமன்றத்தில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு எடப்பாடி பழனிசாமி கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளர் என்பதை உறுதிபடுத்தியிருக்கிறது. கட்சிக்கு ஊறு விளைவித்து, துரோகம் விளைவித்து, கட்சி தலைதூக்கக் கூடாது, அதை எப்படியாவது அழித்துவிட வேண்டும் என்ற வகையில் என்ற எண்ணம் கொண்ட திமுகவோடு கைகோத்துக்கொண்டு, திமுகவின் பி டீமாக செயல்பட்ட ஓபிஎஸ் போன்றவர்கள் அடையாளம் தெரியாதவர்களாக, தொண்டர்களால் நிராகரிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் எங்களுடைய பயணம் எப்போதுமே ஒரு வெற்றி பயணமாக தொடரும். ஈரோடு கிழக்கில் அதிமுக பெறுகின்ற ஒரு மகத்தான வெற்றி, நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும். நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் பெறும் மாபெரும் மகத்தான வெற்றி, 2026 சட்டமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும்" என்றார்.

அப்போது அதிமுக நாடாளுன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், "ஓபிஎஸ்ஸை எப்படி எங்களால் கட்சியில் சேர்க்க முடியும் என்பதற்கு இபிஎஸ் ஏற்கெனவே விளக்கம் கொடுத்துவிட்டார். திமுகவின் பி டீமாக இருக்கும் அவரை எப்படி கட்சியில் சேர்க்க முடியும். எனவே, அவரை கட்சியில் சேர்க்கக் கூடாது என்பது ஒட்டுமொத்த தொண்டர்கள் மற்றும் பொதுக்குழுவின் கருத்து.

அந்தக் கருத்தின் அடிப்படையில்தான் ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் தவிர வேறு யாரும் எங்களுக்கு எதிரிகள் இல்லையே. ரவீந்திரநாத் ஓபிஎஸ்ஸின் மகன். அவர் எப்படி அவருடைய அப்பாவை விட்டுவிட்டு பிரிந்து வருவார். எனவே, அவரும் அதிமுகவில் இல்லை. இது தொடர்பாக ஏற்கெனவே அதிமுக சார்பில் நாடாளுமன்றத்திலும் கடிதமும் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, அவர் அதிமுகவில் இல்லை என்பதுதான் எங்களுடைய கருத்து" என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE