மக்கள் மன்றத்தில் நீதி கேட்போம்; பல ரகசியங்களை வெளிப்படுத்துவோம்: ஓபிஎஸ் பேட்டி

By செய்திப்பிரிவு

சென்னை: மக்கள் மன்றத்தில் நீதி கேட்போம் என்றும் மக்களை சந்திக்கும்போது பல ரகசியங்களை வெளிப்படுத்துவோம் என்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

அதிமுக பொதுக் குழு தீர்ப்பு தொடர்பாக ஓபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சென்னையில் இன்று (பிப்.24) செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியது பின்வருமாறு:

ஓ.பன்னீர் செல்வம்: மக்களை நாடி செல்லும் நிலையில் நாங்கள் உள்ளோம். மக்கள் மன்றத்தில் நீதி கேட்போம். ஜெயலலிதா தான் அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர். இது தொண்டர்களுக்கான இயக்கம். எங்களின் படை புறப்பட்டுவிட்டது. மக்கள் மன்றத்தில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். இந்த தீர்ப்பு பின்னடைவு இல்லை. நாங்கள் ஏதற்காக தனிக் கட்சி தொடங்க வேண்டும்.

எடப்பாடி பழனிசாமி அணிதான் திமுகவின் 'பி' டீம். அவர்களைப் பற்றிச் சொல்ல ஆயிரம் விசயம் உள்ளது. இனி ஒவ்வொன்றாக வெளியே வரும். மக்களை சந்திக்கும்போது பல ரகசியங்களை வெளிப்படுத்துவோம். பழனிசாமி தரப்பினர் ஆணவத்தின் உச்ச நிலையில் உள்ளனர். ஆணவத்தை அடக்கும் சக்தி அதிமுக தொண்டர்கள் மற்றும் மக்களிடம் உள்ளது. விரைவில் மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொள்வோம். தீர்ப்பை எங்கு பெற வேண்டுமோ அங்கு பெறுவோம்.

பண்ருட்டி ராமச்சந்திரன்: நீதியும், நியாயமும் எங்கள் பக்கம் உள்ளது. மீண்டும் நீதிமன்றத்தை நாடுவோம். பொதுக்குழு செல்லும் ஆனால், அதன் தீர்மானம் பற்றி பேச மாட்டோம் என்பது, உச்ச நீதிமன்றம் பொறுப்பை தட்டிக்கழிக்கிறதோ என எண்ண வைக்கிறது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கையெழுத்திட்டால் தான் பொதுக்குழு செல்லும்.

மனோஜ் பாண்டியன்: உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு இல்லை. பொதுக்குழு தொடர்பாக தான் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தீர்மானங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் எந்த உத்தரவும் வழங்கவில்லை. தீர்மானத்தை எதிர்த்து நீதிமன்றத்தை நாடலாம் என்று கூறப்பட்டுள்ளது. எனவே ஆலோசனை செய்து அடுக்க கட்ட நடவடிக்கை எடுப்போம். தீர்மானம் செல்லும் என்று உச்ச நீதிமன்ற தீர்ப்பில் எந்த வரியும் இல்லை. இந்த வழக்கு பொதுக்குழு தொடர்பான வழக்கு மட்டுமே. தீர்மானம் தொடர்பான வழக்கு இல்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE