கும்பகோணம் | திருநறையூர் ராமநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்

By சி.எஸ். ஆறுமுகம்

கும்பகோணம்: திருநறையூரிலுள்ள பர்வதவர்த்தினி அம்பாள் சமேத ராமநாத சுவாமி கோயிலில் இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இக்கோயில் சோழ காலத்தில் கட்டப்பட்ட 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானதாகும். இங்கு மந்தாதேவி, ஜேஷ்ட்டா தேவி என இரு மனைவிகள் மற்றும் மாந்தி, குளிகன் என இரு மகன்களுடன் காக்கை வாகனத்துடன் கொடிமரம் பலி பீடங்களுடன் தனி சன்னதி கொண்டு மங்கள சனி பகவானாக அருள் பாலித்து வருகிறார்.

மேலும், அயோத்தியை ஆட்சி செய்த தசரதனுக்கு ஏற்பட்ட நோய் தீர, இங்கு குளத்தில் நீராடி, சுவாமியையும், மங்கள சனி பகவானையும் வழிபட்டு நோய் தீர்ந்தது. பின்னர், இதனையறிந்த தசரதரின் மகனான ஸ்ரீ ராமன், இங்கு வந்து புனித நீராடி, மண்ணாலான ஒரு லிங்கத்தை செய்து வழிபட்டார் என கூறப்படுகிறது.

இத்தகைய சிறப்பு பெற்ற கோயிலில் 18 ஆண்டுகளுக்கு பிறகு உபயதாரர் நிதியில் ரூ.12 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் கும்பாபிஷேகப் பணிகள் மேற்கொள்ள கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 14-ம் தேதி பாலாலயம் செய்து பணிகள் தொடங்கப்பட்டது. தற்போது அனைத்து பணிகளும் முடிந்துள்ள நிலையில் இன்று கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது.

முன்னதாக கடந்த 20-ம் தேதி தேவதா அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, ஹோமங்களும், 21-ம் தேதி தீர்த்தஸங்க்ரஹணம், பூமி தேவி பூஜைகளும், 22-ம் தேதி பரிவார மூர்த்திகளுக்கு கலாகர்ஷணமும், மாலையில் முதல் கால யாக பூஜையும், 23-ம் தேதி 2-ம் காலை கால யாகபூஜையும், மாலையில் 3-ம் கால யாக பூஜைகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, இன்று காலை 4.30 மணிக்கு 4-ம் கால யாக பூஜையும், 6.15 மணிக்கு யாத்ராதானமும், 6.50 பர்வதவர்த்தினி அம்பாள் சமேத ராமநாதசுவாமி மற்றும் மங்கள சனீஸ்வரன் பகவான் சன்னதியின் விமானங்கள் கும்பாபிஷேகமும், தொடர்ந்து இரவு சுவாமிகள் வீதியுலா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் பா.பிரபாகரன், தக்கார் தி.அருணா மற்றும் கோயில் பணியாளர்கள், உபயதாரர்கள் செய்திருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE