ஒரு சிலரை தவிர யார் வந்தாலும் சேர்த்துக் கொள்வோம்: பழனிசாமி அறிவிப்பு

By செய்திப்பிரிவு

மதுரை: ஒரு சிலரைத் தவிர யார் வந்தாலும் அதிமுகவில் சேர்த்துக் கொள்வோம் என்று அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி மதுரையில் தெரிவித்தார்.

மதுரையில் நேற்று செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் அளித்த பதில்:

கே: பன்னீர்செல்வத்துக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

ப: நீதிமன்ற வழக்கு முடிந்துவிட்டது. அவரோடு எங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை.

கே: கட்சியைக் காப்பாற்றும் போராட்டத்தில் வெற்றி, அடுத்து எதை நோக்கி அதிமுக பயணம் இருக்கப் போகிறது?

ப: இனி அதிமுக எழுச்சியோடு கட்சிப் பணியையும் மக்கள் பணியையும் ஆற்றும்.

கே: கட்சியின் சட்ட விதிகளைக் காப்பாற்றுவதற்காக இரண்டாம் தர்ம யுத்தத்தை நடத்துவதாக பன்னீர்செல்வம் கூறுகிறாரே?

ப: அவரைத்தான் நீங்கள் கேட்க வேண்டும்.

கே: இரட்டை இலைச் சின்னத்துக்கு வெற்றி கிடைக்காது என்று தினகரன் கூறுகிறாரே?

ப: அவர் தனிக்கட்சி தொடங்கி விட்டார். எங்கள் கட்சியைப் பற்றி பேச அவருக்குத் தகுதியும் இல்லை;தேவையும் இல்லை.

கே: ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உள்ள பொதுக்குழு உறுப்பினர்களை கட்சியில் சேர்ப்பீர்களா?

ப: நாங்கள் ஏற்கெனவே அழைப்பு விடுத்தோம். ஒரு சில நபர்களைத் தவிர, யார் வந்தாலும் அதிமுக வரவேற்கும், ஏற்றுக்கொள்ளும்.

கே: அந்த ஒரு சிலர் நபர்களும் வந்தால் ஏற்றுக் கொள்வீர்களா?

ப: அதுதான் இல்லை என்று ஆகிப்போச்சே. உச்ச நீதிமன்றம் வரை கொண்டு போய்விட்டார்களே.

கே: முன்னாள் முதல்வர் ஜெயலிதாவின் ஆளுமை, முடிவுகளை உங்களிடம் எதிர்பார்க்கலாமா, தவறு செய்வோர் மீது நடவடிக்கை எடுப்பீர்களா?

ப: ஏற்கெனவே நான் 4 ஆண்டுகள், 2 மாத காலம் ஆட்சி நடத்தினேன். ஆனால், எதிர்க்கட்சியினர் 2 மாதம், 6 மாதம் நீடிக்குமா? என்று விமர்சித்தது என்ன ஆனது. நிச்சயமாக எதிர்காலத்தில் அதிமுக ஆட்சி அமைக்கும்.

கே: தற்போது இடைக்காலப் பொதுச் செயலாளராக உள்ளீர்கள், எப்போது நிரந்தரப் பொதுச் செயலாளராக ஆவீர்கள்?

ப: மூத்த நிர்வாகிகளிடம் கலந்துபேசி இது குறித்து முடிவு எடுக்கப்படும்.

கே: 2024 மக்களவைத் தேர்தல் கூட்டணி எப்படி இருக்கும்?

ப: அதற்கு இன்னும் நாள் இருக்கிறது.

கே: பாஜகவுடன் கூட்டணி தொடருமா?

ப: எங்களுடைய கூட்டணி தொடரும் என்று ஏற்கெனவே கூறிவிட்டேன். இப்போதைக்கு முக்கியம் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக பல்லாயிரகணக்கான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவதே எங்கள் இலக்கு.

கே: ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத்தை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி உள்ளீர்களா?

ப: ஏற்கெனவே முடிவெடுத்து நீக்கம் செய்தாகிவிட்டது. நீக்கப்பட்டது செல்லும் என்று உச்ச நீதிமன்றத்தில் கூறிவிட்டார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முன்னதாக, மதுரை திருமங்கலம் அருகே டி.குன்னத்தூர் ஜெயலலிதா நினைவு மண்டபத் திடலில், முன்னாள் அமைச்சர் ஆர்பி.உதயகுமார் மகள் உட்பட 51 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்து அவர் பேசியதாவது:

உச்ச நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு வெளியாகும் என்று சொன்னார்கள். காலைமுதல் கலங்கிப் போய் இருந்தேன். மனதிலே ஓர் அச்சம் ஏற்பட்டது. எப்படி இந்தத் தீர்ப்பு அமையும்? என்னவாக இருக்கும்? என்று எண்ணி இரவு முழுவதும் எனக்கு தூக்கமே வரவில்லை.

தீர்ப்பு எப்படியாக இருக்கும் என்ற அச்சத்திலே இங்கு வந்தேன். அதனால், எனது உதட்டில் மட்டுமே இருந்த சிரிப்பு உள்ளத்தில் இல்லவே இல்லை. இங்குள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்துவிட்டு பிறகு மேடைக்குச் செல்லலாம் என்று நிர்வாகிகள் கூறினர். அதை ஏற்று எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்தேன்.

அப்போது நான், ‘உங்கள் இருவர் ஆசியுடன் 51 ஜோடிகளுக்கு திருமணம் நடக்கிறது. இந்த நாளில் நல்ல தீர்ப்புக் கிடைக்க வேண்டும்,’ என்று வேண்டிக் கொண்டேன். நான் நினைத்தபடியே சில நிமிடங்களிலேயே அதிமுகவுக்கு நல்ல தீர்ப்பு கிடைத்துள்ளது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் யாராலும் அதிமுகவை அழிக்க முடியாது.

அதிமுக எனக்குப் பின்னாலும் 100 ஆண்டு காலம் தொடரும் என்று ஜெயலலிதா கூறினார். அது இன்று சாத்தியமாகி இருக்கிறது. சில எட்டப்பர்கள் அதிமுகவை ஒழிக்க, முடக்க நினைத்தனர். திமுகவுக்கு ‘பி’ டீமாக இருந்து செயல்பட்டனர். அவர்கள் முகத்திரை இன்று கிழிக்கப்பட்டுள்ளது.

6, 7 மாத காலமாக அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பட்ட வேதனை, எண்ணிலடங்காதவை. எதிர்க்கட்சியினர் அதிமுக காலியாகபோகிறது, எதிர்காலமே இல்லை என்று கூறினர். உச்ச நீதிமன்றத் தீர்ப்பு அந்த வெற்றுப் பேச்சுகளுக்கு முடிவுகட்டிவிட்டது என்றார்.

நாளை போராட்டம்: பின்னர், ஈரோட்டில், இடைத்தேர்தல் தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய அவர், இடைத்தேர்தலில், மக்களை ஆடு மாடுகளைப் போல, திமுகவினர் பட்டியில் அடைத்து வைத்துள்ளனர்.

திமுகவினர் முன்பு திருமங்கலம் ஃபார்முலாவை அறிமுகப்படுத்தியதுபோல், தற்போது ஈரோடு கிழக்கு பட்டி ஃபார்முலாவை அறிமுகம் செய்துள்ளனர். இதை நிறுத்தாவிட்டால், நாளை அதிமுக பெரிய போராட்டத்தில் ஈடுபடும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

50 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்