பெண் கல்விக்கு எதிரான பழமைவாத கருத்துகளை விதைக்கும் எண்ணம் நிறைவேறாது: முதல்வர் ஸ்டாலின் உறுதி

By செய்திப்பிரிவு

சென்னை: பெண் கல்விக்கு எதிரான பழமைவாத கருத்துகளை விதைக்க நினைப்பவர்கள் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை தியாகராயநகரில் உள்ள வித்யோதயா அரசு உதவி பெறும் மகளிர் பள்ளி 1924-ம்ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. அதன் நூற்றாண்டு தொடக்கவிழா பள்ளி வளாகத்தில் நேற்றுநடைபெற்றது. இதில் முதல்வர்ஸ்டாலின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, பள்ளி நூற்றாண்டை நினைவுகூரும் விதமாக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மணிக்கூண்டை திறந்து வைத்தார்.

அதைத்தொடர்ந்து, நூற்றாண்டு விழா மலரை வெளியிட்டு மு.க.ஸ்டாலின் பேசியதாவது: சென்னையில் பல்வேறு பள்ளிகள் இருந்தாலும் நூற்றாண்டு காணும் பள்ளிகள் குறைவாகும். அந்தவகையில் நூற்றாண்டு காணும் இந்த வித்யோதயா பள்ளி மாபெரும் அறிவுச் சுரங்கமாக இயங்கிவருவது பெருமைக்குரியது.

பெண்களை படிக்க வெளியேஅனுப்பக்கூடாது போன்ற கட்டுப்பாடுகள் இருந்த காலகட்டத்தில் மகளிருக்காக தனியாக பள்ளியை தொடங்கி பெரும் புரட்சியை உருவாக்கியது வித்யோதயா பள்ளி.

அத்தகைய பழமைவாத கருத்துகளை மீண்டும் சமூகத்தில் விதைக்க சிலர் முயல்கின்றனர். அவர்களின் இந்த பிழைப்புவாத கருத்துகளை தூக்கிப் போட்டுவிட்டு மாணவிகள் நன்றாகப் படிக்க வேண்டும். ஏனெனில், கல்விதான் யாராலும் திருட முடியாத சொத்து. அந்த சொத்தை நீங்கள்அடையக் கூடாது என திட்டமிடுபவர்களின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது. அனைவருக்கும் கல்வி வேண்டும். அதிலும் குறிப்பாக பெண்களுக்கு நிச்சயமாக கல்வி வேண்டும்.

தரமான கல்வி வழங்குவதில் இந்தியாவிலேயே தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. முதலிடத்துக்கு கொண்டு வருவதற்கான அனைத்து பணிகளையும் பள்ளிக்கல்வித் துறை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன், பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிய செயலி, எண்ணும் எழுத்தும் இயக்கம், வகுப்பறை உற்று நோக்கு செயலி என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். இது அரசுப் பள்ளி உட்பட அனைத்து பள்ளிகளுக்குமானது. இத்தகைய புதிய திட்டங்களை ஆர்வத்துடன் அனைத்து கல்வி நிறுவனங்களும் செயல்படுத்த வேண்டும்.

‘நான் முதல்வன்’ திட்டம்: ‘நான் முதல்வன்’ திட்டம் நமது தமிழக மாணவர்கள் அனைத்து திறன்களையும் கொண்டவர்களாக மாற்றக்கூடியதாக அமைந்துள்ளது. நம் மாநிலத்தில் 100 சதவீத எழுத்தறிவு, பள்ளிப் படிப்பறிவு, கல்லூரிப் படிப்பு என்பதை நிச்சயமாக எட்டியாக வேண்டும்.

இடைநின்றுவிடும் பிள்ளைகளை மீண்டும் பள்ளிக்குள் அழைத்துவர வேண்டும். குறிப்பாக கற்றல் குறைபாடுகள் உடைய குழந்தைகளுக்கு தனிக்கவனம் செலுத்த வேண்டும். பெண் குழந்தைகளை தன்னம்பிக்கை கொண்டவர்களாக மாற்ற வேண்டும். பள்ளியுடன் கல்வியை நிறுத்திவிடாமல் கல்லூரிகளுக்கும் அவர்கள் செல்ல வேண்டும். பல்வேறு நிலைகளில்தங்களது திறமைக்கு ஏற்ற பணிகளில் அவர்கள் இயங்க வேண்டும். அதுதான் உங்களை உருவாக்கிய பள்ளிக்கும், மாநிலத்துக்கும் பெருமையை வழங்கும். இவ்வாறு முதல்வர் பேசினார்.

தொடர்ந்து, கல்வி, விளையாட்டு போன்றவற்றில் சிறப்பிடம் பிடித்த மாணவிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.இந்நிகழ்வில் திமுக எம்எல்ஏ எழிலன், ஓய்வுபெற்ற டிஜிபி லத்திகாசரண், பள்ளியின் தலைவர் ஜெயந்தி, தாளாளர் சாரதா பாலசுப்பிரமணியம் மற்றும் ஆசிரியர்கள், மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

தமிழகம்

24 mins ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்