50 ஆண்டுகளில் அதிமுக சந்தித்த சிக்கல்களும் சமரச தீர்வுகளும்..!

By செய்திப்பிரிவு

சென்னை: அதிமுக என்ற அரசியல் கட்சியை 1972-ம்ஆண்டு எம்ஜிஆர் தொடங்கினார். அதற்கு அடுத்த ஆண்டே திண்டுக்கல் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலை எதிர்கொண்டு முதல் வெற்றியை பெற்றார். இது எம்ஜிஆருக்கு புதிய உத்வேகத்தை கொடுத்தது. அதைத் தொடர்ந்து 1977-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பெரும்பான்மை பெற்று முதல்முறையாக ஆட்சியைப் பிடித்தார். திமுகவின் பல்வேறு நெருக்கடிகளை சமாளித்து தொடர்ந்து 3 தேர்தல்களில் வெற்றி வாகை சூடினார். 1987-ம் ஆண்டு டிச.24-ம் தேதி எம்ஜிஆர் மறையும் வரை, தமிழகத்தில் அசைக்க முடியாத சக்தியாக அதிமுக திகழ்ந்தது.

எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு முதல்முறையாக கட்சியில் பிளவு ஏற்பட்டது. ஜானகி அணி, ஜெயலலிதா அணி என இரு அணிகளாக செயல்பட்டதால், கட்சியின் வெற்றிச் சின்னமான இரட்டை இலை முடக்கப்பட்டது. 1989-சட்டப்பேரவைத் தேர்தலில் சேவல் சின்னத்தில் ஜெ.அணியும், இரட்டைப் புறா சின்னத்தில் ஜானகி அணியும் போட்டியிட்டன. அந்த தேர்தலில் திமுக ஆட்சியைப் பிடித்தது.

ஜானகி அணியைவிட ஜெயலலிதா அணி அதிக இடங்களில் வெற்றி பெற்றது.தேர்தலுக்குப் பிறகு ஜானகி பெருந்தன்மை யுடன் கட்சியை ஜெயலலிதாவிடம் ஒப்படைத்தார். ஒன்றுபட்ட அதிமுகவின் பொதுச்செயலாளரான ஜெயலலிதா, தனது தலைமையில் 1991-ம் ஆண்டு தேர்தலை எதிர்கொண்டு, அதிமுகவை மீண்டும் ஆட்சியில் அமர்த்தினார். பின்னர், 2001, 2011, 2016 ஆகிய தேர்தல்களிலும் வெற்றி பெற்று முதல்வரானார்.

ஊழல் வழக்குகளில் இடையிடையே பதவி இழந்தாலும், அதில் இருந்து விடுபட்டு ஃபீனிக்ஸ் பறவைபோல மீண்டும் முதல்வராக பொறுப்பேற்று ஆட்சி நடத்தினார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு மீண்டும் அதிமுகவுக்கு சோதனை ஏற்பட்டது. சசிகலாவின் நிர்பந்தத்தால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்ஓபிஎஸ்.

சசிகலா முதல்வராக பொறுப்பேற்க இருந்த நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளிவந்து, சசிகலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார். அதனால் வேறு வழியின்றி, பழனிசாமியை முதல்வராக்கினார். அப்போது பன்னீர்செல்வம் தர்மயுத்தத்தை நடத்தி வந்தார். அந்த நேரத்தில் அதிமுக பிரிந்து சசிகலா அணி, பன்னீர்செல்வம் அணி என செயல்பட்டதால் 2017-ல் நடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது 2-வது முறையாக இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது.

சில மாதங்களில் சசிகலா அணி, பழனிசாமி அணியாக மாறியது. இபிஎஸ், ஓபிஎஸ் அணிகளுடன் டிடிவி தினகரனும் தனி அணியாக பிரிந்து சென்றார். பின்னர் அதை அமமுக என்ற கட்சியாக மாற்றினார்.பின்னர் ஓபிஎஸ், இபிஎஸ் அணிகள் இணைந்தன. கட்சி இரட்டை தலைமையின்கீழ் வந்தது. ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக பழனிசாமியும் இருந்தனர்.

கட்சிக்குள் பல பிரச்சினைகள் எழுந்த போதும், நான்கரை ஆண்டு ஆட்சியை பழனிசாமி நிறைவு செய்தார். 2021 தேர்தலின்போது முதல்வர் வேட்பாளர் யார் என்பதிலும், ஆட்சியை இழந்த பிறகு எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதிலும் இருவருக்கும் மோதல் ஏற்பட்டது. இருவரும் பலகட்டசட்டபோராட்டங்களை நடத்தி வருகின்றனர். பொதுக்குழு தொடர்பான வழக்கில் பழனிசாமிக்கு சாதகமாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தாலும், அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து கீழமைநீதிமன்றங்களில் உள்ள வழக்கால், சட்ட சிக்கல் நீடித்துக் கொண்டிருக்கிறது. 50 ஆண்டுகளை கடந்து பொன்விழா காணும் அதிமுக, பல்வேறு சிக்கல்களை சந்தித்து அதற்கு சமரச தீர்வுகளையும் கண்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE