சிவிங்கி புலிகளை போல ஆப்பிரிக்காவில் இருந்து குள்ளநரிகளையும் கொண்டுவர வேண்டும் - வேதனையை பகிர்ந்த விவசாயிகள்

By எஸ்.விஜயகுமார்

சேலம்: ஆப்பிரிக்காவில் இருந்து, சிவிங்கி புலிகளை இந்தியாவுக்கு கொண்டு வந்தது போல, விளை பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றி, மயில்களைக் கட்டுப்படுத்த, குள்ள நரிகளை கொண்டு வர வேண்டும் என்று வேடிக்கையாக தங்கள் வேதனையை விவசாயிகள் தெரிவித்தனர்.

சேலம் மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா தலைமை வகித்தார். கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது: மலைப்பகுதிகள், வனப்பகுதிகள் ஆகியவற்றை ஒட்டிய விளை நிலங்களில், காட்டுப்பன்றிகள் புகுந்து, விளைபயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.

இதேபோல், மயில்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டதால், மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் உள்ள விளைநிலங்களில், மயில்கள் புகுந்து, பயிர்களை சேதப்படுத்துகின்றன. காட்டுப்பன்றிகள், மயில்கள் ஆகியவற்றால் விளைபயிர்கள் பெருமளவு சேதமடைகின்றன.
இதனால் விளைச்சல் பாதிக்கப்பட்டு, விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது.

எனவே, காட்டுப்பன்றிகள், மயில்களால் விளை பயிர்கள் சேதப்படுத்தப்படுவதை தடுக்க, வனத்துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சேதடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

விவசாயிகள் கூறிய பிரச்சினைக்கு பதிலளித்து வனத்துறை ஊழியர் பேசுகையில், "வனத்தில் உடும்பு, குள்ளநரி இருந்தால் காட்டுப்பன்றி மற்றும் மயிலின் எண்ணிக்கை கட்டுக்குள் வரும். ஆனால், சிலர் வனத்துக்குள் வேட்டைக்கு வந்து வன விலங்குகளை வேட்டையாடுகின்றனர்" என்றார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள், "வனப்பகுதிக்குள் வேட்டையாட வருபவர்களை கைது செய்வதற்கு விவசாயிகள் எப்போதும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. விவசாயிகளும் வேட்டைக்கு செல்வதில்லை. வனத்துக்குள் இருந்து, விளை நிலத்துக்குள் வரும் வன விலங்குகளை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆப்பிரிக்காவில் இருந்து சிவிங்கி புலிகளை இந்தியாவுக்கு கொண்டு வந்ததைப்போல, குள்ளநரிகளை கொண்டு வந்து, வனத்தில் விட வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தனர்.

ஒவ்வொரு முறையும் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தின்போதும், வனவிலங்குகளால் ஏற்படும் பிரச்சினைகளை கட்டுப்படுத்தக்கோரி பேசி வந்த விவசாயிகள், நேற்றைய கூட்டத்தின்போது, வேடிக்கையாக, தங்கள் வேதனையை வெளிப்படுத்திப் பேசி, பிரச்சினையின் தீவிரத்தை உணர்த்தினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE