இலவச திருமணம் திட்ட செலவினத் தொகை ரூ.50 ஆயிரமாக உயர்வு: அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

By செய்திப்பிரிவு

சென்னை: இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களின் சார்பில் நடத்தப்படும் இலவச திருமணங்களில் ஒரு இணை திருமணத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ள திட்டச் செலவினத் தொகை ரூ.20 ஆயிரத்திலிருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

2022-2023-ம் ஆண்டுக்கான இந்து சமய அறநிலையத் துறையின் மானியக் கோரிக்கையில், “ஒரு இணை ஆணையர் மண்டலத்துக்கு 25 இணைகள் வீதம் 20 மண்டலங்களில் ஆண்டுதோறும் 500 இணைகளுக்கு கோயில்களில் திருமணம் நடத்தப்படும்.

இதற்கான செலவை கோயில்களே ஏற்கும்” என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், கோயில்களில் ஒரு இணை திருமணத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ள திட்ட செலவின தொகையை ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்திஅரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அதில் கூறியிருப்பதாவது:சட்டமன்ற அறிவிப்புபடி இன்னும் 283 ஏழை எளிய இணைகளுக்கு கோயில்கள் மூலம் இலவசத் திருமணம் நடத்தி வைக்கப்பட உள்ளது. திருமணத்துக்கு அனுமதிக்கப்பட்ட செலவினத் தொகை இயன்ற வரையில் உபயதாரர்கள் நிதி மூலம் மேற்கொள்ளப்படுவதாலும், உபயதாரர் கிடைக்காத நிலையில் நிதிவசதிமிக்க கோயில்கள் மூலமே திருமணம் நடத்தி வைக்கப்படுவதாலும், கோயில்களின் சார்பில் நடத்தப்படும் ஒரு இணை திருமணத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ள திட்டச் செலவினத் தொகை ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதில், திருமாங்கல்யம் 4 கிராம், மணமக்கள் ஆடை, மாலை, 20 நபர்களுக்கு உணவு, பீரோ, கட்டில், மெத்தை, தலையணைகள், பாய், கைக்கடிகாரங்கள், மிக்ஸி, சமையல் பாத்திரங்கள், பூஜைப் பொருட்கள் அடங்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE