சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சின் காரணமாக அவர் செல்லுமிடம் எல்லாம் கருப்புக் கொடி போராட்டம் நடத்தவும், முதல்கட்டமாக பிப்ரவரி 28-ல் ஆளுநர் மாளிகை கருப்புக் கொடி போராட்டம் நடத்த உள்ளதாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழ்நாட்டில் ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றதிலிருந்து மாநில உருவாக்கத்தை கடித்து, மாநிலத்தின் பெயரைக் கடித்து, அரசமைப்புச் சட்டத்தின் விழுமியங்களைக் கடித்து, இப்போது மார்க்சையும், டார்வினையும் கடிக்க ஆரம்பித்திருக்கிறார். செக்கு என்றும், சிவன் என்றும் தெரியாமல் நடந்து கொள்வதைப் போல ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் மார்க்சையும், மார்க்சியத்தையும் சாடியிருக்கிறார்.
அறிவில் அந்நிய அறிவு, உள்ளூர் அறிவு என்றும் கிடையாது. சொல்லப்போனால் ஆர்.என்.ரவியின் ஞான பீடம் ஒரே கொடி, ஒரே தலைவர், ஒரே நாடு என்கிற உதவாக்கரை தத்துவத்தையும், சாகாவையும் பாசிஸ்ட் முசோலினியிடமிருந்தும், கொடி வணக்கம், மார்பில் கை வைத்து வணங்கும் முறை, சுவஸ்திக் ஆகியவற்றை ஹிட்லிரிடமிருந்தும் கடன்பெற்றுக் கொண்ட அமைப்பு. இன அழிப்புக் கொள்கைக்கு ஹிட்லரை முன்னோடியாக கொள்ள வேண்டும் என்று ஜெர்மன் நாஜியை குருவாக ஏற்றுக் கொண்ட அமைப்பு. தத்துவம், நடைமுறை என அனைத்தையும் ஐரோப்பாவிலிருந்து கடன் வாங்கிக் கொண்ட ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சார்ந்த ஆர்.என்.ரவி மார்க்சியத்தை அந்நிய தத்துவம் என்று பேசுவது அவரது அறியாமையையே காட்டுகிறது.
மனிதகுல வரலாற்றில் ஆளும் வர்க்கத்தின் சுரண்டல், ஒடுக்குமுறை கொடுமைகளிலிருந்து உழைப்பாளி வர்க்கத்தை மீட்டு சுரண்டலற்ற பொதுவுடமை சமூகத்தை அமைக்க வழிவகுக்கும் மார்க்சிய சித்தாந்தத்தை விமர்சிப்பதன் மூலம் ஆளுநர் ரவி தான் ஆளும் வர்க்கத்தின் ஏஜெண்ட் என்பதையே வெளிப்படுத்தியுள்ளார். மார்க்சியம் இந்தியாவை சிதைத்து விட்டது என்று பேசுகிறார். பெருநோய்களை சிதைக்கும் தடுப்பு மருந்துகளை தவறானது என்று யாரும் பேச மாட்டார்கள். உலகத்தை அதன் அனைத்து விதமான கோரங்களிலிருந்தும் மீட்டெடுத்து அனைவருக்குமான பூமியாக மாற்றுவதே மார்க்சியத்தின் நோக்கம். அது சிதைக்கும் தத்துவமல்ல. அது செதுக்கும் தத்துவம். அறிவுச் சிதைவு ஏற்பட்டவர் மட்டுமே அதை சிதைக்கும் தத்துவமாக கருதுபவர்கள்.
ஆர்.என்.ரவி அரசு அதிகாரத்தை பயன்படுத்திக் கொண்டு அடாவடித்தனமாகவும், பொருத்தமற்ற முறையிலும் பேசுவதை கண்டித்தும், மார்க்சியம் குறித்து அவதூறாக பேசியதற்கு வருத்தம் தெரிவிக்க வலியுறுத்தியும் அவர் செல்லுமிடம் எல்லாம் கருப்புக் கொடி ஏந்தி எதிர்ப்பை தெரிவிப்பது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு முடிவு செய்துள்ளது.
இதன் தொடக்கமாக 2023 பிப்ரவரி 28 அன்று கவர்னர் மாளிகை முன்பு கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும். இப்போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்புகளும், ஜனநாயக முற்போக்கு இயக்கங்களும் கலந்துகொண்டு கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பை தெரிவிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்'' என்று கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago