புதுச்சேரியில் மார்ச் மாதம் முழு பட்ஜெட்: பேரவையில் 9-ம் தேதி துணைநிலை ஆளுநர் தமிழிசை உரை

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: புதுச்சேரியில் இம்முறை மார்ச் மாதம் முழு பட்ஜெட் தாக்கலாகிறது. பட்ஜெட் கூட்டத் தொடரின் தொடக்க நிகழ்வாக வரும் 9-ம் தேதி சட்டப்பேரவையில் துணைநிலை ஆளுநர் தமிழிசை உரையாற்றவுள்ளார்.

புதுவை சட்டப்பேரவையில் கடந்த காலங்களில் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். ஆனால், கடந்த 12 ஆண்டுகளாக மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. அதற்கு பதிலாக மார்ச் மாதம் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டு வந்தது.

மத்திய அரசு அறிவுறுத்தல்படி, இந்த நடைமுறையை மாற்றி இந்த நிதியாண்டில் முழுமையான பட்ஜெட்டை மார்ச் மாதம் தாக்கல் செய்ய ரங்கசாமி தலைமையிலான புதுவை அரசு திட்டமிட்டது. இதற்காக மாநில திட்டக்குழு கூட்டம் ஆளுநர் தமிழிசை தலைமையில் அண்மையில் கூடியது. இதற்கான திட்டக்குழு கூட்டத்தில் பட்ஜெட் தொகையாக ரூ.11,600 கோடி நிர்ணயித்து மத்திய அரசு ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. இது கடந்த பட்ஜெட்டை விட ரூ.1000 கோடி அதிகம்.

இச்சூழலில் வரும் மார்ச் 9-ம் தேதி காலை 9. 45 மணிக்கு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆளுநர் தமிழிசை உரையாற்ற உள்ளார் என்று சட்டப்பேரவைச்செயலர் தயாளன் ஆளுநர் ஒப்புதலுடன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதைத் தொடர்ந்து பட்ஜெட் தாக்கலாகும் தேதி வெளியாகும். வரும் வாரங்களில் முழு பட்ஜெட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் கிடைத்துவிடும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE