ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் ஆலோசனை

By செய்திப்பிரிவு

டெல்லி/ சென்னை/ ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக துணைத் தேர்தல் ஆணையர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ம் தேதி நடக்கிறது. 77 பேர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், தொகுதி முழுவதும் பரவலாக வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருள் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கிடையே, ஒவ்வொரு வீட்டிலும் எத்தனை வாக்குகள் இருக்கின்றன என்ற எண்ணிக்கை குறித்து, வீடுகளின் முகப்பு சுவரில், குறியீடு இடப்பட்டிருப்பது குறித்து தேர்தல் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும், ஈரோடு கிழக்கில் வாக்காளர்களை கொட்டகையில் அடைத்து வைத்து பணம் விநியோகம் செய்வது, சுற்றுலா அழைத்துச் செல்வது, தலைவர்களின் பிரச்சாரத்தில் பங்கேற்கச் செய்து, அதற்கு பணம் வழங்குவது, அசைவ விருந்து வழங்குவது என பல முறைகேடுகள் நடப்பதாக தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

வாக்குப் பதிவுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், பரிசுப் பொருள், பணம் வழங்கும் நடவடிக்கையில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்தும், தேர்தல் அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. துணைத் தேர்தல் ஆணையர் அஜய், காணொலி காட்சி மூலம் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி, மாவட்ட தேர்தல் அலுவலர், தேர்தல் பார்வையாளர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர் ஆகியோரிடம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE