53 ஆண்டு பழமையான இறைவை பாசனத் திட்டத்தை செயல்படுத்த முதல்வர் ஸ்டாலினிடம் மனு

By சி.எஸ். ஆறுமுகம்

கும்பகோணம்: ஒரத்தநாடு வட்டத்தில் 53 ஆண்டுகள் பழமையான இறைவை பாசனத் திட்டம் முடங்கியுள்ளதை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என 5 ஊராட்சித் தலைவர்கள் ஒக்கநாடு கீழையூர் வழியாக இன்று வந்த தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் மனு அளித்தனர்.

திருவாரூர் மாவட்டம் வடுவூர் ஏரியில் இருந்து உருவாகும் கண்ணாறு சுமார் 34 கி.மீ தூரம் சென்று புளியகுடி கிராமத்தில் பாமினி ஆற்றில் இணைந்து கடலில் கலக்கிறது. கண்ணாறு வடிகாலின் குறுக்கே ஆறு படுக்கை அணைகளின் மூலம் 8241 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. இதில், ஒரத்தநாடு வட்டம், ஓக்கநாடு கீழையர் படுகை பகுதியில், மின் இறைவை பாசனத்திட்டம் மூலமாக, மேட்டுப்பகுதிகளுக்கு நீர் வழங்கப்பட்டு, பாசன வசதி பெறுகின்றது. இந்த மின் இறைவை திட்டமானது முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில், கடந்த 1969-ம் ஆண்டு, செப்டம்பர் 17-ம் தேதி தொடங்கப்பட்டு, ஐ.ஆர்.8 என்ற புதிய நெல் ரகமும் அறிமுகம் செய்யப்பட்டது.

இதன் மூலம், ஓக்கநாடு கீழையர், காவாரப்பட்டு, கருவிழிக்காடு, ஒவேல்குடி, கீழவன்னிப்பட்டு, கருவாக்குறிச்சி ஆகிய கிராமத்தைச் சேர்ந்த 2,283 ஏக்கர் பரப்பளவு பாசன வசதி பெறுகிறது. இந்நிலையில், 53 ஆண்டுகள் பழமையான மின் இறைவை இயந்திரங்கள் அடிக்கடி பழுதாகி விடுவதால், அதனை மாற்ற வேண்டும் என விவசாயிகள் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டு, ஒக்கநாடு கீழையூர் வழியாக சென்ற முதல்வர் ஸ்டாலினிடம், ஓக்கநாடு கீழையர் ஊராட்சி மன்றத் தலைவர் சுரேஷ் தலைமையில், பாசன வசதி பெறும் கிராமத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர்கள், விவசாயிகள் இறைவை பாசனத் திட்டத்தைப் புதுப்பித்து செயல்படுத்த வேண்டும் என மனுவாக அளித்தனர்.

அதில், ”தற்போது உள்ள மின்மோட்டர்கள் 110 குதிரை திறன் சக்தி கொண்ட 6 மோட்டர்கள், மின் சாதனங்கள் பொருட்கள் கடந்த 50 ஆண்டுகளாக இயங்கி வருவதால், அடிக்கடி பழுதாகி விடுகிறது. பாசன வாய்க்கால்கள் ஆக்கிரமிப்புகளாலும், புதர்கள் மண்டியும் உள்ளதை சீரமைக்கச் செய்ய வேண்டும். எனவே, புதிய மின் மோட்டார்கள், மின் சாதன பொருட்கள் கொண்டு செயல்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும். அக்னியாறு வடிநிலக்கோட்டம் மூலம் ரூ. 22.50 கோடி திட்ட அறிக்கை தயார் செய்து அனுப்பப்பட்டுள்ளதற்கு அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும்” என மனுவில் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE