தோழமை அடிப்படையில் காயத்ரி ரகுராம் உடன் சந்திப்பு: திருமாவளவன் விளக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: காயத்ரி ரகுராம் உடனான சந்திப்பு என்பது தோழமை அடிப்படையிலான சந்திப்பு என்றும், அவர் மேற்கொள்ளவிருக்கும் சக்தி யாத்ராவுக்கு அழைப்பு விடுத்ததகாவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட நடிகை காயத்ரி ரகுராம், ஜனவரி 27-ம் தேதி, சென்னை முதல் கன்னியாகுமரி வரை ‘பாதிக்கப்பட்ட பெண்களுக்காக சக்தி யாத்திரை’ நடத்த இருந்தார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் காரணமாக இந்த யாத்திரையின் தேதி ஏப்ரல் 14-ம் தேதிக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, இந்த யாத்திரைக்கு ஆதரவு கோரி, சென்னையில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவனை, காயத்ரி ரகுராம் புதன்கிழமை சந்தித்தார்.

இந்தச் சந்திப்பு குறித்து திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் இட்ட பதிவில், "அம்பேத்கர் திடலுக்கு வந்த காயத்ரி ராகுராமுக்கு 'உலக வரலாற்றில் பெண்கள்' எனும் நூலைப் பரிசாக அளித்தேன். அன்னை சாவித்திரிபாய் ஃபுலேவின் சகிப்புத் தன்மையும் ஜெயலலிதா அம்மையாரின் போர்க் குணமும் பொதுவாழ்வில் ஒவ்வொரு பெண்மணிக்கும் தேவை என்பதைச் சொல்லி அவரை வாழ்த்தினேன்.

கருத்தியல் முரண்களைக் கடந்து மனித உறவுகளுக்கான மாண்புகளைப் போற்றுவது சிறுத்தைகளின் சிறப்பாகும். அம்பேத்கர் திடலுக்கு வருகை தந்த காயத்ரி ரகுராமை வரவேற்றுச் சிறப்பித்தோம். ஏப்ரல் 14 புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாளில் அவர் தொடங்கவிருக்கும் சக்தி யாத்ரா வெற்றிபெற வாழ்த்தினோம்" என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், இந்தச் சந்திப்பு குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு திருமாவளவன் அளித்த பேட்டியில், "கருத்து மாறுபாடுகள் இருந்தாலும், தோழமை அடிப்படையில் இந்த சந்திப்பு நடந்தது. அதாவது, ஏற்கெனவே விடுதலை சிறுத்தைகள் குறித்தும், என்னைப் பற்றியும் காயத்ரி ரகுராம் விமர்சித்திருக்கிறார். அவருக்கு தனிப்பட்ட முறையில் எங்கள் மீது எந்தவிதமான வெறுப்பும் இல்லை. உள்நோக்கமும் இல்லை. அவருக்கு தரப்பட்டுள்ள தவறான தகவல்களின் அடிப்படையில், அவர் எதிர்வினையாற்றினார்" என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE