சென்னை: கிழக்கு கடற்கரை தொடர்வண்டி திட்டத்தின் பாதையை மாற்றக் கூடாது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தின் கனவுத் தொடர்வண்டி திட்டங்களில் ஒன்றான சென்னையிலிருந்து மாமல்லபுரம், புதுச்சேரி வழியாக கடலூருக்கு கிழக்குக் கடற்கரை வழியாக தொடர்வண்டிப் பாதை அமைக்கும் திட்டத்தில் மாற்றம் செய்ய தொடர்வண்டித் துறை முடிவு செய்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன.
கிழக்கு கடற்கரை தொடர்வண்டிப் பாதை திட்டத்தில் ஏதேனும் மாற்றங்கள் செய்யப்பட்டால், அது அந்தத் திட்டத்தின் நோக்கத்தையே சிதைத்துவிடும்.
சென்னை பெருங்குடியில் தொடங்கி மாமல்லபுரம், கல்பாக்கம், புதுச்சேரி வழியாக கடலூருக்கு தொடர்வண்டிப் பாதை அமைப்பது தான் 2007 ஆம் ஆண்டில் தீட்டப்பட்ட திட்டம் ஆகும். இந்தத் திட்டத்திற்கு தான் அப்போதைய மத்திய திட்டக்குழு ஒப்புதல் அளித்தது. இதுதான் தமிழகத்திற்கு, குறிப்பாக சென்னையின் தென்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மிகவும் பயனளிக்கும் திட்டம் ஆகும்.
» ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் | நாம் தமிழர் வேட்பாளர் மீது மேலும் ஒரு வழக்குப் பதிவு
» சென்னையில் அனுமதியின்றி பேரணி: அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினர் மீது வழக்குப்பதிவு
ஆனால், இப்போது பெருங்குடிக்கு மாற்றாக செங்கல்பட்டு நகரில் இருந்து இந்தத் திட்டத்தை தொடங்க தெற்கு தொடர்வண்டித் துறை திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்காக, தெற்கு தொடர்வண்டித் துறை தரப்பில் கூறப்படும் காரணம், பெருங்குடி மற்றும் அதையொட்டிய கிழக்குக் கடற்கரைச் சாலை மற்றும் பழைய மாமல்லபுரம் சாலை பகுதிகளில் நிலத்தின் மதிப்பு அதிகரித்து விட்டது என்பதுதான். இந்தக் காரணம் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல.
பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் தொடர்வண்டித் துறை இணை அமைச்சராக பதவி வகித்த காலத்தில் தான் கிழக்குக் கடற்கரை தொடர்வண்டிப் பாதைக்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. 2007ம் ஆண்டில் தொடர்வண்டித்துறை இணையமைச்சராக அரங்க.வேலு இருந்தபோது தான் இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டது. சென்னையில் தொடங்கி கடலூர் வரை முழுக்க முழுக்க வங்கக் கடலை ஒட்டிய பகுதிகள் வழியாக தொடர்வண்டிப்பாதை அமைப்பது தான் இந்தத் திட்டத்தின் நோக்கம் ஆகும்.
கடலூருக்கு அப்பால் ஏற்கெனவே கிழக்குக் கடற்கரையை ஒட்டியுள்ள தொடர்வண்டிப் பாதையை இணைத்தும், புதிய பாதையை அமைத்தும் சென்னை முதல் கன்னியாகுமரி வரை கிழக்குக் கடற்கரை தொடர்வண்டிப் பாதை அமைப்பது தான் அடுத்தக்கட்ட திட்டம். இந்தத் திட்டத்தை மாற்றி பெருங்குடிக்கு பதிலாக செங்கல்பட்டில் இருந்து தொடர்வண்டிப் பாதை அமைக்கப்பட்டால் அது கிழக்குக் கடற்கரை தொடர்வண்டிப் பாதையாக இருக்காது.
கிழக்குக்கடற்கரை தொடர்வண்டித் திட்டம் அறிவிக்கப்பட்ட 2007ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, பெருங்குடி உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தின் மதிப்பு அதிகரித்திருக்கிறது என்பதும், அதனால் இந்தத் திட்டத்திற்கான செலவு அதிகரிக்கும் என்பதும் உண்மைதான். 2007ம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட ஒரு திட்டத்தை 16 ஆண்டுகள் கழித்து செயல்படுத்த முனைந்தால், அந்தத் திட்டத்தின் செலவுகள் எவ்வளவு அதிகரிக்குமோ, அதே அளவு தான் பெருங்குடியிலிருந்து இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கும் அதிகரிக்கும். இந்த எதார்த்தத்தை மறைத்துவிட்டு, மற்ற திட்டங்களுக்கான செலவுகள் எல்லாம் அதிகரிக்காததைப் போலவும், இந்தத் திட்டத்திற்கான செலவு மட்டும் தான் அதிகரித்துவிட்டது போலவும் தோற்றத்தை ஏற்படுத்த தொடர்வண்டித் துறை முயல்வது நியாயமல்ல.
பெருங்குடிக்கு பதிலாக செங்கல்பட்டில் இருந்து இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதால், பல பாதிப்புகள் ஏற்படக்கூடும். செங்கல்பட்டில் இருந்து இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், அதனால் சென்னை மாநகர மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை. அவர்கள் இன்னொரு தொடர்வண்டி மூலம் செங்கல்பட்டுக்குச் சென்று, அங்கிருந்து கிழக்குத் தொடர்வண்டிப் பாதையில் புதுவைக்கோ, கடலூருக்கோ செல்வதைவிட, பேருந்தில் நேரடியாக சென்றுவிட முடியும். அதுமட்டுமின்றி, சென்னை முதல் கன்னியாகுமரி வரை கடற்கரையை ஒட்டியே தொடர்வண்டிப் பாதை என்ற கனவுத் திட்டம் சிதைந்து விடும்.
பெருங்குடியில் இருந்து கிழக்குக் கடற்கரை தொடர்வண்டிப் பாதை அமைப்பதற்கு திட்டச் செலவு சற்று அதிகரித்தாலும் கூட, அந்தப் பாதையில் திட்டத்தை செயல்படுத்துவது தான் சரியானதாக இருக்கும். அதற்காக ஆகும் கூடுதல் செலவை, இந்தத் திட்டத்தை 16 ஆண்டுகள் தாமதப்படுத்தியதற்கான தண்டனையாக ஏற்றுக்கொள்ள வேண்டியது தான். எனவே, சென்னை முதல் கடலூர் வரையிலான கிழக்குக் கடற்கரை தொடர்வண்டிப் பாதை ஏற்கெனவே அறிவிக்கப்பட்டதைப்போல பெருங்குடியிலிருந்தே அமைக்கப்படும் என்று தெற்கு தொடர்வண்டித் துறை அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்," இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
57 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago