சென்னையில் அனுமதியின்றி பேரணி: அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினர் மீது வழக்குப்பதிவு

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் அனுமதியின்றி பேரணி நடத்திய அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ராணுவ வீரர் பிரபுவின் படுகொலையை கண்டித்தும், பாஜக பட்டியல் அணி மாநிலத் தலைவர் தடா பெரியசாமியின் இல்லம் தாக்கப்பட்டதை கண்டித்தும் தமிழக பாஜக சார்பில் சென்னை சிவானந்தா சாலையில் நேற்று (பிப்.21) உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இந்த உண்ணாவிரதத்துக்கு தலைமை தாங்கினார்.

மேலும் உண்ணாவிரதம் நடைபெற்ற இடத்தில் இருந்து பாஜகவினர் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணியாகச் சென்று போர் நினைவுச்சின்னத்தில் அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்வில் பாஜக மாநிலத் துணைத்தலைவர்கள் வி.பி.துரைசாமி, கரு.நாகராஜன், மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், பட்டியல் அணி மாநிலத் தலைவர் தடா பெரியசாமி, மாநில செயலாளர் வினோஜ்.பி.செல்வம், மூத்த ராணுவ அதிகாரி நாராயணன், கர்னல் பாண்டியன், மேஜர் மதன்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்நிலையில் அனுமதியின்றி பேரணி நடத்தியதாக பாஜகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டவர்கள் மீது 3 பிரிவின் கீழ் திருவல்லிக்கேணி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE