குறைபாடுகளை சரிசெய்யாமல் கூட்டுறவு சங்கத் தேர்தல் அறிவிக்கப்படாது: உயர் நீதிமன்றத்தில் ஆணையம் உத்தரவாதம்

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: குறைபாடுகளை நிவர்த்தி செய்யாமல் கூட்டுறவு சங்கத் தேர்தல் அறிவிக்கப்படாது என்று உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் உத்தரவாதம் அளித்துள்ளது.

கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்கள் பட்டியலில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வரை, தேர்தல் அறிவிக்கப்படாது என்று கூட்டுறவு சங்கங்கள் தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள 18 ஆயிரத்திற்கு மேற்பட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு கடந்த 2018ம் ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது, தகுதியில்லாத பலர், கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்களாக அவசர கதியில் சேர்க்கப்பட்டதாகவும், தகுதியான உறுப்பினர்களை சேர்த்து, இறந்த, தகுதியில்லாத உறுப்பினர்களை நீக்கி திருத்தங்கள் மேற்கொள்ளும் வரை கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் அறிவிக்க தடை விதிக்க கோரி ஈரோட்டைச் சேர்ந்த சண்முகம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், "கூட்டுறவு சங்கங்களை திறமையான முறையில் நிர்வகிக்கும் வகையில், உறுப்பினர்களின் ஆதார் எண்களை இணைக்க வேண்டும். இறந்த உறுப்பினர்களின் பெயரையும், இடம் மாறிய உறுப்பினர்களின் பெயரையும் நீக்கி ஆண்டுதோறும் ஜனவரி முதல் தேதியில் புதிய உறுப்பினர் பட்டியலை தயாரிக்க வேண்டும் எனவும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் மற்றும் அரசுக்கு கடந்த 2022ம் ஆண்டு மார்ச் 10ம் தேதி கடிதம் அனுப்பி உள்ளேன். இந்த பரிந்துரைகளை அமல்படுத்த அரசு, இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போதைய நிலையில் தேர்தலை நடத்த அனுமதித்தால் அது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கிவிடும்.

மாநிலம் முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர் பட்டியலில் இடம்பெற்றுள்ள இறந்தவர்கள், இடம் மாறியவர்களின் பெயரை நீக்கி, தகுதியான உறுப்பினர்களை சேர்த்து திருத்தப்பட்ட பட்டியலை வெளியிட உத்தரவிட வேண்டும். இந்த குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வரை தேர்தல் அறிவிக்க தடை விதிக்க வேண்டும்” என்று அந்த மனுவில் கூறியுள்ளார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று (பிப்.21) விசாரணைக்கு வந்தபோது, உறுப்பினர் பட்டியலை திருத்தி அனுப்பும்படி, அனைத்து கூட்டுறவு சங்கங்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும், குறைபாடுகளை நீக்காமல் நடத்தும் தேர்தல் நியாயமாக இருக்காது என்பதால் திருத்தப்பட்ட உறுப்பினர் பட்டியல் வெளியிட்ட பிறகே தேர்தல் அறிவிக்கப்படும் எனவும் உறுதி தெரிவித்த தமிழக அரசு, இப்பணிகளை முடிக்க ஆறு வாரகால அவகாசம் வழங்க கோரியது.

இதை ஏற்று நான்கு வார கால அவகாசம் வழங்கிய நீதிபதிகள், மனுவுக்கு பதிலளிக்கும்படி, கூட்டுறவு சங்கங்கள் தேர்தல் ஆணையம், கூட்டுறவுத்துறை செயலாளர், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்