நெடுஞ்சாலைகளில் திரியும் கால்நடைகளின் கொம்பில் சிவப்பு வண்ணம்: தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: நெடுஞ்சாலைகளில் திரியும் கால்நடைகளால் ஏற்படும் விபத்துக்களை தடுக்க, அவற்றின் கொம்பில் சிவப்பு வண்ணம் பூச உத்தரவிடக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் சென்னையில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், "நகர்மயமாக்கல், மேய்ச்சல் நிலங்கள் ஆக்கிரமிப்பு போன்ற காரணங்களால், கால்நடைகள் உணவுக்காக தேசிய - மாநில நெடுஞ்சாலைகளில் சுற்றித் திரிகின்றன. தமிழகத்தில் சாலைகளில் சுற்றித் திரியும், பசு, எருமை மற்றும் நாய்களால் ஏற்பட்ட விபத்துகளால் கடந்த ஐந்து ஆண்டுகளில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மக்களும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடைகளும் பலியாகியுள்ளனர்.

இரவு நேரங்களில் சாலைகளில் திரியும் கால்நடைகள் தெளிவாக பார்க்க முடியாத காரணத்தால் அதிக விபத்துகள் நடக்கிறது. இதுபோன்ற விபத்துக்களை தவிர்க்க ஆந்திரா, தெலங்கானாவில், நாய்கள், கால்நடைகளுக்கு பிரதிபலிக்கும் டேப்கள் பொருத்தப்படுகிறது. தமிழகத்தில் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளுக்கு சிவப்பு நிற பட்டைகளை பொருத்தும்படியும், கொம்புகளில் சிவப்பு நிற பிரதிபலிப்பு பெயின்ட் பூச உரிமையாளர்களுக்கு உத்தரவிட வேண்டும். சாலைகளில் திரியும் விலங்குகளின் உரிமையாளருக்கு அதிக அபராதம் விதிக்க வேண்டும்" என்று அந்த மனுவில் கூறியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு, மத்திய சாலைப் போக்குவரத்து துறை, தமிழக உள்துறை, நெடுஞ்சாலை துறை, நகராட்சி நிர்வாக துறைகள் நான்கு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE