பணபட்டுவாடா நடப்பதால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை ரத்து செய்க: தலைமை தேர்தல் அதிகாரியிடம் தேமுதிக புகார்

By செய்திப்பிரிவு

சென்னை: பணபட்டுவாடா நடைபெறுவதால் ஈரோடு கிழக்கு தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரியிடம் தேமுதிக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ம் தேதி நடக்கிறது. 77 பேர் போட்டியிடுகின்றனர். வாக்குப் பதிவுக்காக 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வாக்காளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணி மற்றும் வாக்காளர்களுக்கு ‘பூத் சிலிப்’ வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் வழங்குவதைத் தடுக்கும் வகையில், பறக்கும்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.50,000-க்கு மேல் எடுத்துச் சென்றால், பறிமுதல் செய்யப்படுகிறது.

இதன்படி நேற்று (பிப்.20) வரை உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட 51 லட்சத்து 31 ஆயிரத்து 590 ரூபாய், ரூ.7.36 லட்சம் மதிப்பில் மதுபானங்கள், ரூ.1.33 லட்சம் மதிப்பில் புகையிலைப் பொருட்கள், கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதைத் தவிர்த்து ஈரோடு கிழக்கு தொகுதியில் பரிசுப் பொருட்கள் விநியோகம் தொடர்பாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை ரத்து செய்யக் கோரி தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம் தேமுதிக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பணபட்டுவாடா நடைபெறுவதால் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று தேமுதிக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஜனார்த்தன் புகார் அளித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE