“தட்டுப்பாட்டில் பால்... தடையின்றி மது...” - புதுச்சேரி அரசு மீது காங்கிரஸ் விமர்சனம்

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: “பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், மது தடையின்றி கிடைக்கும் சூழல் புதுச்சேரியில் அதிகரித்துள்ளது. முதல்வர் ரங்கசாமி கட்டுப்பாட்டிலுள்ள கூட்டுறவு நிறுவனங்கள் மோசமாகியுள்ளது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு விரைவில் கடிதம் அனுப்ப உள்ளேன்” என்று காங்கிரஸ் எம்பி வைத்திலிங்கம் தெரிவித்தார்.

இது தொடர்பாக புதுவை காங்கிரஸ் எம்.பி வைத்திலிங்கம் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: ''புதுவையிலும் அதானி குழுமம் கால் பதித்துள்ளது. காரைக்கால் துறைமுகத்தை அதானி குழுமம் வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. மின்துறை தனியார்மயத்தில் அதானி நிறுவனம் டெண்டர் கோரியுள்ளது. இதுபற்றி அரசு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.

கடந்த 1991 முதல் கூட்டுறவு நிறுவனங்களை முதல்வர் ரங்கசாமி நீண்ட ஆண்டுகளாக தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். இதனால் கூட்டுறவு நிறுவனங்கள் அனைத்தும் நலிவடைந்து, சீர்குலைந்து போயுள்ளது. பாண்லே கூட்டுறவு பால் நிறுவனத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு பால் கிடைப்பதில் தட்டுப்பாடு உள்ளது. ஆனால், மது அதிகமாக தடையின்றி கிடைக்கிறது.

தமிழகத்தில் பால் கொள்முதல் விலை அதிகமாக உள்ளது. புதுவையில் கொள்முதல் விலை குறைவாக உள்ளதால் உற்பத்தியாளர்கள் பாலை தர முன்வருவதில்லை. அதேநேரத்தில் பால் விற்பனை விலை தமிழகத்தைவிட புதுவையில் அதிகமாக உள்ளது. கூட்டுறவு நிறுவனங்களுக்கு, சங்கங்களுக்கு பல ஆண்டாக தேர்தல் நடத்தப்படவில்லை. கூட்டுறவு நிறுவனங்களை சீரமைக்கக் கோரி மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் அனுப்ப உள்ளேன்” என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE