முதல்வர் மு.க.ஸ்டாலின் 70வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்: தேசிய தலைவர்கள் பங்கேற்பு

By செய்திப்பிரிவு

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் தேசிய தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளதாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், திராவிட மாடல் ஆட்சியின் முதல்வர் மு.க.ஸ்டாலின் மார்ச் 1-ம் நாள், தனது எழுபதாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார்கள். இது திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களுக்கு மட்டுமல்ல, தமிழக மக்கள் அனைவர்க்கும் கொண்டாட்ட நாளாக அமையப் போகிறது.

ஆட்சிக்கு வந்த 20 மாத காலத்துக்குள் ஈடு இணையற்ற சாதனைகளைச் செய்து இந்தியாவில் தலைசிறந்த முதல்வர்களில் தலைசிறந்தவராக மு.க.ஸ்டாலின் உயர்ந்து நிற்பதைப் பார்த்து நித்தமும் நான் வியந்து நிற்கிறேன். இளம்வயதில் துள்ளித் திரிந்து 'முரசொலி' நாளிதழ் பணிகளைச் செய்து வந்தார்.

கோபாலபுரம் இளைஞர் திமுக என்ற அமைப்பை தானே உருவாக்கி, அதன் மூலமாக அந்த வட்டாரத்தில் சமூகப் பணிகளை ஆற்றினார். இயல்பிலேயே பிறந்த கலையார்வத்தின் காரணமாக நாடக மேடைகளில் தோன்றி நாடு முழுக்க பரப்புரை நாடகங்களை நடத்தினார். சென்னை மாவட்டக் கழகத்தின் தூணாக வளர்ந்தார்.

இளைஞரணியை உருவாக்கிய காலத்தில் அதன் ஏற்றமிகு செயலாளராக வளர்ந்தார். துணைபொது செயலாளராக- பொருளாளராக - செயல் தலைவராக உயர்ந்து இன்று கழகத்தின் தன்னிகரில்லா தலைவராகச் செயல்பட்டு வருகிறார்.

நிர்வாகப் பணிகளில், சென்னை மாநகரத்தின் வணக்கத்துக்குரிய மேயராக, சட்டமன்ற உறுப்பினராக, அமைச்சராக, துணை முதலமைச்சராக வளர்ந்து இன்று முதல்வராக உயர்ந்து நிற்கிறார். ஆட்சிப்பணியாக இருந்தாலும், கட்சிப்பணியாக இருந்தாலும் உழைப்பை மட்டுமே மூலதனமாகக் கொண்டு, இன்றைய உயர்வுகள் அனைத்தையும் பெற்றவர் மு.க.ஸ்டாலின் என்பதற்கு கழகத்தின் மூத்த முன்னோடிகள் அனைவருமே சாட்சியங்களாக இருக்கிறோம்.

இந்த உழைப்பைக் கூட நேரகாலம் பார்க்காமல் எல்லாப் பொழுதும் அவர் ஆற்றி வந்த காரணத்தால் தான் அவர் அடைந்த வெற்றிகள் அனைத்தும் யாராலும் தொட முடியாத வெற்றியாக அமைந்திருந்தன. தந்தை பெரியாரின் கொள்கை உறுதியையும், பேரறிஞர் அண்ணாவின் நடைமுறை அரவணைப்பையும், அண்ணன் கருணாநிதியின் சலியாத போராட்டக் குணத்தையும், இனமானப் பேராசிரியரின் பொறுமைக் குணத்தையும் ஒருங்கே பெற்று, நால்வரையும் தன்னுள் அடக்கிச் செயல்படும் ஆற்றலாளரான முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுபதாவது பிறந்தநாளை ஏற்றத்துடனும் எழுச்சியுடனும் கொண்டாட திராவிட முன்னேற்றக் கழகம் முடிவெடுத்துள்ளது.

தலைமை கழகத்தின் சார்பில், மார்ச் 1 மாலை 5.00 மணி அளவில் சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில், திராவிட நாயகன் தலைவர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட இருக்கிறது என்பதை அறிவிப்பதில் பெருமை அடைகிறேன். இந்த விழாவுக்கு தலைமை வகிப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். கழகப் பொருளாளரும், கழக நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு வரவேற்புரை ஆற்றுகிறார்.

இந்தியாவில் இருக்கும் முதல்வருக்கு எல்லாம் வழிகாட்டியாக இருக்கக் கூடிய மு.க.ஸ்டாலினை வாழ்த்திப் பேசுவதற்காக இந்தியாவே வருகிறது என்று சொல்லத் தக்க வகையில் அகில இந்தியத் தலைவர்கள் அணிவகுக்க இருக்கிறார்கள். அகில இந்தியக் காங்கிரசு கட்சித் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜூன கார்க்கே, ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும் காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா, சமாஜ்வாதி கட்சித் தலைவரும் உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவரும் பீகார் மாநில துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் வருகை தந்து நம் முதல்வரை வாழ்த்த இருக்கிறார்கள். நமது தலைவர் ஏற்புரை ஆற்ற இருக்கிறார்கள்.

சென்னை தெற்கு மாவட்ட செயலாளரும், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரான மா.சுப்பிரமணியம் நன்றியுரை ஆற்றிட, சென்னை மாவட்ட கழக செயலாளர்கள் விழா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தலைமைக் கழகத்தின் சார்பில் மேற்கொள்வார்கள். நம்முடைய தலைவரின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் என்பது தமிழகத்திற்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கே முக்கியமான விழாவாக மாற இருக்கிறது என்பதில் ஐயமில்லை. இந்திய அரசியல் வரலாற்றில் மகத்தான மாற்றங்களை விளைவிக்கப் போகும் மகத்தான பல்வேறு செயல்களுக்கு தொடக்கமாகவும் அமையப் போகிறது. இந்தியாவின் புதிய விடியலுக்கான பிறந்தநாளாகவும் அமையப் போகிறது.

எழுச்சிமிகு இயக்கத்தின், ஏற்றமிகு தலைவருக்கு எழுபதாவது ஆண்டு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்ல கழகத்தின் இந்நாள், முன்னாள் அமைச்சர்கள், இந்நாள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளைக் கழக நிர்வாகிகள், மாநகராட்சி மன்ற இந்நாள், முன்னாள் உறுப்பினர்கள், அனைத்து அணி நிர்வாகிகள் மற்றும் கழகத் தோழர்கள் ஆகிய உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்." இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

59 mins ago

தமிழகம்

53 mins ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்