அனுமதியின்றி ‛அலெக்சாண்டரியன்' கிளி வளர்ப்பு: ரோபோ சங்கருக்கு ரூ.2.5 லட்சம் அபராதம்

By செய்திப்பிரிவு

சென்னை: அனுமதியின்றி வீட்டில் அலெக்சாண்டரியன் வகை கிளிகளை வளர்த்த ரோபோ சங்கருக்கு வனத்துறையினர் ரூ.2.5 லட்சம் அபராதம் விதித்துள்ளனர்.

சின்னத்திரை மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நகைச்சுவை நடிகராக அடையாளம் பெற்றவர் ரோபோ சங்கர். இவர் தன் குடும்பத்துடன் சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். பல்வேறு செல்லப்பிராணிகளை வளர்த்து வரும் ரோபோசங்கர், பறவைகளையும் வளர்த்து வருகிறார். யூடியூப் சேனல் ஒன்றில் அவரது வீட்டில் வளர்க்கப்படும் அலெக்சாண்டரியன் வகை பச்சை கிளிகளின் வீடியோ ஒன்று வெளியானது.

இதையடுத்து சில நாட்களுக்கு முன்பு அவரது வீட்டில் சோதனை மேற்கொண்ட வனத்துறை அதிகாரிகள் அனுமதியின்றி வளர்க்கப்பட்டு வரும் கிளிகளை பறிமுதல் செய்து கிண்டி சிறுவர் பூங்காவில் ஒப்படைந்தனர். இந்நிலையில் உரிய அனுமதி பெறாமல், வீட்டில் வெளிநாட்டு ரக கிளிகளை வளர்த்ததன் காரணமாக ரோபோ சங்கருக்கு வனத்துறையினர் ரூ.2.5 லட்சம் அபராதம் விதித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE