ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை நிறுத்தக்கோரி இதுவரை புகார் வரவில்லை: சத்யபிரத சாகு 

By செய்திப்பிரிவு

சென்னை: ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலை நிறுத்தக்கோரி இதுவரை புகார் வரவில்லை என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ம் தேதி நடக்கிறது. இத்தேர்தல் வாக்குப்பதிவின்போது பயன்படுத்தப்படவுள்ள, 1430 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்கள் பெயர், சின்னம் பொருத்தும் பணி, ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கிழக்கு இடைத்தேர்தலை நிறுத்தக்கோரி இதுவரை புகார் எதுவும் வரவில்லை என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார். இன்று (பிப்.20) சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தேர்தல் முறைகேடுகள் தொடர்பான காணொலிகளின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுவதால் சி - விஜில் செயலி மூலமாக புகார்களை அனுப்பலாம். சி - விஜில் செயலி மூலமாக ஒரே ஒரு புகார் மட்டுமே பெறப்பட்டுள்ளது.

அனைத்துக்கட்சி கூட்டத்திலும் இது குறித்து தெரிவிக்கப்பட்டது. ஈரோடு கிழக்கில் சட்டம், ஒழுங்கு சுமுகமான முறையில் உள்ளது. பல புகார்கள் வந்தாலும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை நிறுத்தக்கோரி இதுவரை புகார் எதுவும் என்னிடம் வரவில்லை. கொடுக்கப்படும் புகார்கள் அனைத்தும் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறது." இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE