மாரடைப்பால் உயிரிழந்த கபடி பயிற்சியாளர் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: மாரடைப்பால் உயிரிழந்த கபடி பயிற்சியாளர் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "குளித்தலை வட்டம் குளித்தலை குறுவட்டம் சத்தியமங்கலம் கிராமம் கணக்குப்பிள்ளையூரில் சிறுவர்கள் இடையேயான கபடி போட்டி (ஊர் சார்ந்த தனி விளையாட்டு குழு) விளையாட்டிற்கு வந்திருந்த சிறுவர்களை அழைத்து வந்த திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டம், பாளையம் அஞ்சல் கரிச்சிகாரன்பட்டியைச் சேர்ந்த பயிற்சியாளர் மாணிக்கம் த/பெ தங்கவேல் (வயது 26) என்பவர் சிறிது நெஞ்சு வலி இருந்தும் தொடர்ந்து பயிற்சி அளித்துள்ளார்.

போட்டியில் வெற்றி பெற்ற பிறகு நெஞ்சுவலி மிகுதியாக இருந்ததால் அவரை அய்யர்மலை தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

உயிரிழந்த கபடி விளையாட்டு பயிற்சியாளரின் குடும்பத்தினர் மற்றும் அவரது மாணவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்வதோடு உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு இரண்டு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்." இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE