மயில்சாமி இறுதி ஊர்வலம்: திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் பங்கேற்பு

By செய்திப்பிரிவு

சென்னை: மாரடைப்பால் நேற்று (பிப்.19) காலமான நடிகர் மயில்சாமியின் இறுதி ஊர்வலம் சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து தொடங்தியது.

பிரபல நடிகர் மயில்சாமி மாரடைப்பால் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை காலமானார். சென்னை சாலிகிராமத்தில் குடும்பத்துடன் வசித்துவந்த நடிகர் மயில்சாமி, நேற்று முன்தினம் இரவு சிவராத்திரியை முன்னிட்டு சென்னை கேளம்பாக்கம் அருகே உள்ள மேகநாதேஸ்வரர் கோயிலுக்கு சென்றார். டிரம்ஸ் சிவமணியின் இசை நிகழ்ச்சி அங்கு நடந்தது. இதில் பங்கேற்ற மயில்சாமி, கோயிலில் இருந்து நேற்று அதிகாலை 3 மணி அளவில் வீடு திரும்பினார். 3.30 மணி அளவில் அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து, அவரது உடல் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து இன்று (திங்கள்கிழமை) காலை அவரது இறுதி ஊர்வலம் நடந்தது.

மயில்சாமி சிவபக்தர் என்பதால் அவருக்கு கைலாய வாத்தியம் இசைத்து இறுதி மரியாதை செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து வடபழனியில் உள்ள மின்மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படுகின்றது.

சாலிகிராமத்திலுள்ள வீட்டில் இருந்து புறப்பட்ட மயில்சாமியின் இறுதி ஊர்வலத்தில் திரையுலகினர், ரசிகர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு அவருக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE