திருவொற்றியூரில் தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாக கூறப்பட்ட மாணவியின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த குளிர்சாதனப் பெட்டியில் இருந்து மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழந்தார்.
சென்னை திருவொற்றியூர் ராஜா கடை திருச்சினாங்குப்பம் சாலையை சேர்ந்தவர் அபிநயா(16).இவர் சென்னை காசிமேட்டில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 1படித்து வந்தார்.
இவர் கடந்த சில நாட்களாக காதுவலியால் அவதிப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார். இந்நிலையில், அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் அபிநயா அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தனியார் மருத்துவமனையில் அளித்த தவறான சிகிச்சை காரணமாகதான் அபிநயா உயிரிழந்தார் என்றும், தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நேற்று முன்தினம் மாணவியின் உறவினர்கள் திருவொற்றியூர் காவல் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து போலீஸார் பேச்சுவார்த்தை மூலம் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், நேற்று மாணவியின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, உடல் வீட்டுக்கு கொண்டுவரப்பட்டது. பின்னர் மாணவியின் உடல் குளிர்சாதன பெட்டியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அப்போது அருகில் மாணவியின் உறவினர்கள் சோகத்தில் அழுது கொண்டிருந்தனர்.
இந்நிலையில், அபிநயா உடல் வைக்கப்பட்டிருந்த குளிர் சாதன பெட்டியில் இருந்து திடீரென மின்சாரம் பாய்ந்தது. அப்போது அருகில் இருந்த அபிநயாவின் உறவினர்கள் மீது மின்சாரம் பாய்ந்ததில், காசிமேட்டை சேர்ந்த அஜித் (19) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், 2 பெண்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வழக்கு மாற்றம்
அபிநயாவின் உடலை தனக்கு தெரியாமல் பிரேத பரிசோதனை செய்ததால், மீண்டும் மறு பிரேதபரிசோதனை செய்ய உத்தரவிடக்கோரி அபிநயாவின் தாய் நந்தினி சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ‘ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள், தனியார் மருத்துவமனை மருத்துவர்கள், திருவொற்றியூர் போலீஸார் கூட்டு சேர்ந்து மகளின் உடலை பெற்றுச் செல்லும்படி நிர்பந்தித்ததாகவும், இந்த வழக்கைதிருவொற்றியூர் காவல் நிலையத்தில் இருந்து வேறு காவல் நிலையத்துக்கு மாற்றி முழுமையான விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும்’ குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த மனு, அவசர வழக்காக நீதிபதி மஞ்சுளா விசாரித்தார். அப்போது, ‘மாணவியின் மரணம் தொடர்பான வழக்கின் விசாரணையை திருவொற்றியூர் போலீஸாரிடம் இருந்து, வண்ணாரப்பேட்டை போலீஸாருக்கு மாற்றியதுடன், 3 மாதங்களில் விசாரணையை முடிக்க வேண்டும்,’ என உத்தரவிட்டு மனுவை முடித்து வைத்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
11 mins ago
தமிழகம்
17 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago