அதிருப்தியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் - ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எதிரொலிக்குமா?

By எஸ்.கோவிந்தராஜ்

ஈரோடு: தேர்தல் நேரத்தில் தங்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை என்ற அதிருப்தி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்கள் மத்தியில் இருப்பதால், அது ஈரோடு கிழக்கு தொகுதி வாக்குப்பதிவில் எதிரொலிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள வாக்காளர்களை, கொத்துக் கொத்தாகப் பிரித்து, ஆதரவு திரட்டும் பணியில் ஆளுங்கட்சியும், எதிர்கட்சியும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. சாதி அமைப்புகள், தொழில் அமைப்புகள் ஆகியவற்றின் பிரதிநிதிகளை குழுவாக அணுகும் அமைச்சர்கள், அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டுப் பெற்று நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்து வருகின்றனர். எனினும், இந்த வகையில் தொகுதி முழுவதும் கணிசமான எண்ணிக்கையில் உள்ள தங்களை யாரும் தேடி வராததோடு, தங்கள் கோரிக்கைகள் குறித்து யாரும் வாய் திறக்காததால் அரசு ஊழியர்கள் விரக்தி அடைந்துள்ளனர்.

10 ஆயிரம் வாக்குகள்: ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள், பல்வேறு அரசு பள்ளிகள் என ஈரோடு கிழக்கு தொகுதியில் ஏராளமான அரசு ஊழியர்கள் உள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் குடும்பங்கள், 3000-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர் குடும்பங்கள் என தொகுதி முழுவதும் இவர்கள் வசித்து வருகின்றனர். இந்த குடும்பங்களைச் சார்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் முக்கிய பங்கு வகிக்க இருக்கின்றன.

நம்பிக்கை இழந்து விட்டோம்: கடந்த வாரம் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில பொதுச்செயலாளர் செல்வம், ‘தமிழக அரசு பொறுப்பேற்ற இரண்டு ஆண்டுகளில், தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட இதுவரை நிறைவேற்றவில்லை. இது ஊழியர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளதால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டக் களத்திற்கு வந்துள்ளனர். அரசு ஊழியர் சங்கமும், ஜாக்டோ - ஜியோவும் தமிழக முதல்வர் மீது வைத்திருந்த நம்பிக்கையை இழந்து விட்டது. இனியும் பொறுமையுடன் காத்திருக்கக் கூடாது என்ற அடிப்படையில், போராட்டங்கள் நடத்தப்படவுள்ளன’ என்று தெரிவித்தார்.

இந்த பின்னணியை மனதில் கொண்டு, ஈரோடு கிழக்கு தொகுதியில் வசிக்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் பேசியபோது, அவர்கள் கூறியதாவது: "திமுக அரசு பொறுப்பேற்றால் பழைய ஓய்வூதியத் திட்டம் கொண்டு வரப்படும் என்ற நம்பிக்கையோடு அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் ஒன்று பட்டு வாக்களித்தனர். இன்று பல மாநிலங்களில், பழைய ஓய்வூதியத் திட்டம் அமலுக்கு வந்துள்ளது. ஆனால், தமிழகத்தில் இது குறித்த பேச்சே இல்லை. உரிய தேதியில் அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் பரிசீலிக்கப்படவில்லை.

6 லட்சம் காலிப்பணியிடங்கள்: அங்கன்வாடி ஊழியர்கள், ஆர்.பி.செவிலியர்கள், கிராமப்புற நூலகர்கள், கிராம உதவியாளர்கள் ஆகியோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்ற எங்களின் நீண்ட நாள் கோரிக்கையும் ஏற்கப்படவில்லை. தமிழகத்தில் 6 லட்சம் அரசு பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்ப நடவடிக்கை எடுக்காமல், பல்வேறு துறைகளில் ‘அவுட் சோர்சிங்’ முறையில் பணியாளர்களை அரசு நியமித்து வருகிறது. ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாட்டைப் போக்க வேண்டும் என்ற கோரிக்கை மீதும் நடவடிக்கை இல்லை. ஓய்வூதியர்களின் கோரிக்கைகளும் கவனிக்கப்படவில்லை. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த மாநாட்டில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், சம்பிரதாயத்திற்குக்கூட ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதனால், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் திமுக ஆட்சியின் மீது அதிருப்தியில் உள்ளனர்" என்றனர்.

எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு: ஈரோட்டில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி, ‘திமுக அரசு படிக்காதவர்களை மட்டுமல்ல, படித்தவர்களையும் ஏமாற்றுகிறது. அரசு ஊழியர்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை’ என குற்றம் சாட்டினார். அதிருப்தியில் உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆகியோரின் வாக்குகளை அறுவடை செய்யும் முயற்சியில் அதிமுக ஈடுபட்டு வருதையே இது காட்டுகிறது. அதே நேரத்தில், அரசு ஊழியர் அமைப்புகள் இடதுசாரி கட்சிகளின் சார்பு அமைப்புகளாக இருந்து வருகின்றன. திமுக கூட்டணியில் இடதுசாரிகள் உள்ளதால், தேர்தல் நேரத்தில் தங்கள் கோரிக்கைகளை வெளிப்படையாகப் பேசவே அரசு ஊழியர் அமைப்பின் நிர்வாகிகள் தயக்கம் காட்டுகின்றனர்.

பகை மூட்டிய அதிமுக: அதேநேரத்தில், ‘எங்கள் கோரிக்கைகளை திமுக அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது உண்மைதான். ஆனால், அதிமுக ஆட்சிக்காலத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை பேச்சுவார்த்தைக்கு கூட அழைத்ததில்லை. அதோடு, அரசின் மொத்த செலவினத்தில் எங்களது சம்பளத்திற்கே அதிகம் செலவு ஆகிறது எனக்கூறி, அதிமுக ஆட்சியில் விளம்பரம் வெளியிடப்பட்டது. இதன் மூலம் பொதுமக்களுக்கும் எங்களுக்கும் இடையே பகை மூட்ட முயற்சி நடந்தது’ என்ற கருத்தை சங்க பிரதிநிதிகள் முன் வைக்கின்றனர். வாக்குப்பதிவிற்கு முன்பாக நம்பிக்கையளிக்கும் வகையில் அரசு தரப்பில் வாக்குறுதி வழங்கப்படும் என்ற எண்ணம் சிலரிடம் உள்ளது. இந்த நிலையில் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் அரசின் மீதான நம்பிக்கையை தொடர்வார்களா என்பது தேர்தல் முடிவில் தெரியவரும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்