மயில்சாமியின் இழப்பு ஈடு செய்ய முடியாதது - முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

By செய்திப்பிரிவு

சென்னை: திரையுலகில் தனக்கென முத்திரையை பதிவு செய்த மயில்சாமியின் இழப்பு ஈடு செய்ய முடியாதது என்று முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பிறந்த இவர், முதன் முதலில் மிமிக்கிரி கலையால் பொதுவெளியில் அறியப்பட்டார். பல திரைப்படங்களில் நடித்துள்ள மயில்சாமி திடீர் உடல் நலக்குறைவால் இன்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 57.

மயில்சாமியின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் குறிப்பில், “பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி மறைந்தார் என்ற துயர்மிகு செய்தியறிந்து வருந்தினேன். பல்வேறு குரல்களில் நகைச்சுவையாக பேசும் ஆற்றல் படைத்த அவர், தன்னுடைய ஒலி நாடாக்கள் வழியாக தமிழ்நாடு முழுவதும் அறிமுகமானவர். காமெடி டைம் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் நாட்டு மக்களின் இல்லங்களில் ஒருவராக பார்க்கப்படுகிற அளவுக்கு அன்பை பெற்றவர். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பாராட்டை பெற்றவர். தொலைக்காட்சி விவாதங்களில் தன்னுடைய கருத்துகளை ஆழமாக பதிவு செய்தவர். திரையுலகில் தனக்கென முத்திரையை பதிவு செய்த அவரின் இழப்பு ஈடு செய்ய முடியாதது. அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும் திரையுலகக் கலைஞர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

மத்திய இணை அமைச்சர் எல். முருகன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ''நகைச்சுவை நடிகர் மயில்சாமி, உடல்நலக்குறைவால் உயிரிழந்த செய்தி மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. தன்னை சுற்றியுள்ள பகுதிகளுக்கு, சமூக எண்ணத்தினால் பல சேவைகளை செய்து, தனது நகைச்சுவை நடிப்பின் மூலம் மக்களிடத்தில் நீங்கா இடம் பிடித்த அவரின் மறைவு திரையுலகிற்கு பேரிழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். ஓம் சாந்தி..!'' என குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு உணவு அமைச்சர் சக்கரபாணி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ''தமிழ் மக்களை தனது நகைச்சுவையின் வாயிலாக சிரிக்க வைத்த நடிகர் மயில்சாமி மறைந்த செய்தி அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்!'' என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE