மாடுகளை இறைச்சிக்காக விற்கவும்,கோவில்களில் பலியிடவும் விதிக்கப்பட்டுள்ள தடை காரணமாக மத மற்றும் சமூக நல்லிணக்கம் பாதிக்கப்படும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்
“மத்திய பா.ஜ.க. அரசு 1960 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட மிருகவதைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கால்நடைகளை இறைச்சிக்காக விற்பது, வாங்குவது போன்றவற்றிக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்து, ‘மிருகவதைத் தடுப்பு (கால்நடை சந்தை ஒழுங்குமுறை) விதிகள் 2017’ என்ற பெயரால் அறிவிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.
இதன்படி காளைகள், பசு மாடுகள், எருமை மாடுகள், கன்றுடன் கூடிய பசு மாடு, கன்று, ஒட்டகம் போன்ற கால்நடைகளை சந்தைகளில் இறைச்சிக்காக வாங்கவோ, விற்கவோ கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது. உலக மாட்டிறைச்சி சந்தையில் பிரேசிலுக்கு அடுத்த இடத்தில் இந்தியாதான் ஏற்றுமதியில் முன்னிலை வகிக்கிறது. பா.ஜ.க.அரசின் நடவடிக்கையால் நாட்டில் ஒரு லட்சம் கோடி மதிப்பிலான இறைச்சி சந்தை பாதிக்கப்படும்.
பருவ மழை பொய்த்ததால், வேளாண்மைத் தொழில் நலிவடைந்து, விவசாயிகள் கால்நடைகளை பராமரிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், விவசாயிகள் கால்நடைகளை சந்தைகளில் விற்பனை செய்வதற்கு கடுமையான விதிமுறைகளை கொண்டு வந்திருப்பது நியாயமானதல்ல.
கால்நடைகளை விற்பதற்காக சந்தைக்குக் கொண்டு செல்லப்பட்டால் அவை இறைச்சிக்காக விற்பனை செய்யவில்லை என்று கால்நடைகளின் உரிமையாளரிடம் ஒப்புதல் கையெழுத்து பெறப்பட்ட விண்ணப்பத்தை உரிய அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும்.
சந்தையில் கால்நடை ஒன்றை விற்ற பின்பு, விற்பனை செய்ததற்கான ஆதாரத்தை 5 நகல்களாக தயாரித்து, கால்நடையை வாங்கியவர், விற்பனை செய்தவர், வட்ட அலுவலகம், மாவட்ட கால்நடை அதிகாரி மற்றும் கால்நடை சந்தைக் குழு ஆகியோரிடம் ஒப்படைக்க வேண்டும்.
கால்நடைகள் விற்பனை செய்யும்போது, கால்நடை சந்தை மேற்பார்வைக் குழுவின் அதிகாரிகள் கால்நடைகள் விவசாயத்துக்காக விற்கப்படுகின்றன என்று விற்பவரிடமும், வாங்குபவர் விவசாயிதான் என்பதையும் நிரூபிக்கும் வகையில் ஆவணங்களை சரிபார்க்க வேண்டும். மேலும் கால்நடைகளை விலைக்கு வாங்குபவர்கள் அவற்றை ஆறு மாதங்களுக்கு வேறு யாருக்கும் விற்பனை செய்யப்பட மாட்டாது என்ற உறுதியையும் அளிக்க வேண்டும்.
நடைமுறை சாத்தியமற்ற இத்தகைய விதிமுறைகள் மூலம் கால்நடைகள் விற்பனை செய்வதையே தடை செய்ய வேண்டும் என்று மத்திய அரசு முடிவுக்கு வந்திருப்பதைத்தான் இவை காட்டுகின்றன. கோடிக்கணக்கான மக்களின் மத வழிபாட்டு உரிமையில் தலையிடும் வகையில் கோயில்களில் கால்நடைகளை பலியிடக்கூடாது என்றும், விதிகள் கொண்டுவரப்பட்டிருப்பது இந்துத்துவா சக்திகளின் உண்மையான நோக்கத்தை பிரதிபலிக்கிறது.
மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு பொறுப்பேற்ற மூன்று ஆண்டு காலத்தில் மாட்டிறைச்சி அரசியல், வன்முறைகளின் கோர தாண்டவம் உச்சத்திற்குப் போய்விட்டது. பா.ஜ.க. ஆளும் குஜராத் மாநிலத்தில் பசுவதைத் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து, பசுக்களை இறைச்சிக்காக வெட்டினாலோ, மாட்டிறைச்சியை வாகனம் மூலம் கொண்டு சென்றாலோ ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் புதிய சட்டம கொண்டுவரப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் - உனா மாவட்டதில் பசுக்களின் காவலர்கள் என்று கூறிக்கொள்ளும் ‘கவ்ரக்ஷக்’ எனும் அமைப்பைச் சேர்ந்தவர்கள், தோலுக்காக பசுவை கொன்றதாக தலித் இளைஞர்களை கட்டி வைத்து கடுமையாக தாக்குதல் நடத்தினர். பா.ஜ.க. ஆட்சி செய்யும் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள மாண்ட்சோரில் பசு இறைச்சி வைத்திருந்ததாக இரு இஸ்லாமிய பெண்கள் தாக்கப்பட்ட சம்பவம் பெரும அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
உத்திரப்பிரதேசத்தில் உள்ள தாத்திரியில் மாட்டிறைச்சி சமைத்ததாகக் கூறி முகமது அக்லக் என்பவரை இந்துத்துவா வெறிக் கும்பல் அடித்துக் கொன்றது. காஷ்மீர் மாநிலத்தில் சுயேட்சை எம்.எல்.ஏ. ஒருவரை மாட்டிறைச்சி விருந்து நடத்தியதாகக் கூறி, ஆளும் கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் காஷ்மீர் சட்டமன்றத்திலேயே அடித்து உதைத்தனர்.
இது போன்று நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான வன்முறைகள் நடந்திருக்கின்றன. சிறுபான்மை மக்கள், தலித் மக்கள் இந்துத்துவக் கூட்டத்தின் தாக்குதலுக்கு ஆளாகி வரும் நிலைமை இன்றும் தொடருகிறது. இந்நிலையில், கால்நடைகளை இறைச்சிக்காக விற்கக் கூடாது என்றும், கோவில்களில் பலியிடக்கூடாது என்றும் பா.ஜ.க. அரசு கொண்டுவந்திருக்கும் சட்டம் கடுமையான கண்டனத்துக்கு உரியது.
இந்தியாவின் பன்முகத் தன்மையை சீர்குலைக்கும் வகையில் சிறுபான்மை மக்களின் வழிபாட்டு உரிமைகளைப் பறிப்பதும், சிறு தெய்வங்கள், நாட்டார் கோவில் வழிபாடுகளில் முக்கிய இடம் பெறும் பலியிடுதலை தடுக்க முயற்சிப்பதும் நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தும் என்பதை பா.ஜ.க. அரசு உணர வேண்டும்.
சகிப்பின்மையால் இந்தியாவின் மத, சமூக நல்லிணக்கம் புதை குழியில் சிக்கிவிடும் ஆபத்து நேரிடும். எனவே, ‘மிருகவதை தடுப்பு விதிகள் 2017’ என்ற தலைப்பில் கொண்டுவந்துள்ள அறிவிக்கையை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வைகோ அந்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்
முக்கிய செய்திகள்
தமிழகம்
12 mins ago
தமிழகம்
43 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
21 hours ago
தமிழகம்
23 hours ago
தமிழகம்
1 day ago
தமிழகம்
1 day ago