‘‘அந்த பேனா இல்லையென்றால், நாம் படித்திருக்கவே முடியாது” -  உயர் கல்வி அமைச்சர் பொன்முடி

By வி.சீனிவாசன்

சேலம்: ‘‘அந்த பேனா இல்லையென்றால் நாம் படித்திருக்கவே முடியாது. தலைநிமிர்ந்து நாமெல்லாம் இருக்க அந்தப் பேனாவே காரணம்.’ என உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

பெரியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு அரசின் ரூ.2 கோடி நிதியுதவியுடன் கலைஞர் ஆய்வு மையம் அமைய உள்ளது. இந்த ஆய்வு மையத்திற்கான கட்டுமான பணிகளை உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, “தமிழகத்தின் எதிர்காலம் மாணவர்கள் கையில் உள்ளது. ‘நான் முதல்வன்’ திட்டம் மாணவ, மாணவியரின் திறனை அதிகரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மாணவ, மாணவியர்கள் தமிழ்நாட்டைப் பற்றி, தமிழ் மொழியைப் பற்றி அதிகமாக ஆய்வுகள் நடத்த வேண்டும்.

தமிழகத்தில் அம்பேத்கர் கொள்கைகளை கொண்டு வந்தவர் பெரியார். எல்லோரும் சமம். எல்லோரும் மனிதர்கள் என்பதை திராவிட இயக்கம்தான் கொண்டு வந்தது. வகுப்புக்கு ஒரு பெண் மட்டுமே பயின்று வந்த காலம் போய் 80 சதவீதம் பெண்கள் பயில்வதற்கு திராவிட இயக்கமே காரணம். அம்பேத்கர், பெரியார், அண்ணா, கலைஞரின் கொள்கைகளை இன்றைக்கு திராவிட மாடல் ஆட்சியாக முதல்வர் ஸ்டாலின் நடத்தி வருகிறார்.

பொறியியல் கல்வி பயிலும் மாணவர்களுக்கு 2 செமஸ்டரில் தமிழை ஒரு பாடமாக கொண்டு வரப்பட்டுள்ளது. விரைவில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. 14 வயதில் முரசொலி நாளிதழை ஆரம்பித்து தமிழுக்கு பாடுபட்டவர் கருணாநிதி. அவரின் வழியில் இன்றைய முதல்வர் ஸ்டாலினும் கடலில் பேனா சதுக்கம் அமைப்பது பிரச்சினையாக உள்ளது. அந்த பேனா இல்லையென்றால் நாம் படித்திருக்கவே முடியாது. தலைநிமிர்ந்து நாமெல்லாம் இருக்க அந்தப் பேனாவே காரணம். பெண்கள் அதிகம் கல்வி கற்க, அடித்தட்டு மக்களுக்கு சமூக நீதி அடிப்படையில் இட ஒதுக்கீடு கொடுத்தது கருணாநிதியின் பேனாதான். பெரியார் பல்கலைக்கழக மாணவிகள், பெரியார் மற்றும் கருணாநிதி பற்றி நூல்களை படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.

மாபெரும் தமிழ்கனவு திட்டத்தில் கல்லூரிக்கு 50 பேரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பேசும் திறனை வளர்க்க உயர் கல்வித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. எல்லா துறையிலும் மாணவர்கள் தங்களது ஆற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும். தமிழ்நாடு என்பதே கொஞ்சம் பேருக்கு பிடிக்கவில்லை. வெறும் புத்தகம் மட்டுமே படிக்காமல் எல்லாவற்றையும் தெரிந்து கொண்டால்தான் சரியாக இருக்கும். எல்லோரும் ஒருங்கிணைந்து இந்தப் பணியை செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டிற்கென தனியாக கல்விக் கொள்கையை வகுக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 5-ம் வகுப்பு, 8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு என்பதை ஏற்க முடியாது. தமிழ்நாடு தமிழ் உணர்வு என்று செயல்பட வேண்டும். வெளிநாட்டிற்கு ஆங்கிலம், உள்ளூருக்கு தமிழ் என 2 மொழிகள் மட்டுமே போதும். இதை எதிர்த்து எந்த திட்டம் வந்தாலும் அதை மீறி இருமொழிக் கொள்கையை முதல்வர் ஸ்டாலின நிச்சயம் செயல்படுத்துவார். எங்கு சென்றாலும் மொழி உணர்வு, நாட்டு உணர்வு இருக்க வேண்டும். அனைவரும் சமம், ஆண் பெண் சமம் என்பதை ஏற்று அனைவருக்கும் பரப்ப வேண்டும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE