விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமம் செயல்பட அனுமதித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேல்முருகன் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: "தமிழ்நாடு முழுவதும் செயல்படும் ஆசிரமங்கள், காப்பகங்கள், முதியோர் இல்லங்கள் முறையாக செயல்படுகின்றனவா என்பது குறித்து ஆராய்வதற்கு, ஓய்வுபெற்ற நீதிபதிகள், மனித உரிமை ஆர்வலர்கள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும்" என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "விழுப்புரம் அருகே குண்டலப்புலியூர் பகுதியில் செயல்பட்டு வந்த அன்பு ஜோதி ஆசிரமத்தில் 143 பேர் அடைத்து வைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டுள்ளதும், இளம் பெண்களை போதைப் பொருட்கள் கொடுத்து பாலியல் வன்புணர்வு செய்துள்ளதும், பலர் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளனர் என்பதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை பல்வேறு விதத்தில் சித்ரவதைக்கு உள்ளாக்கியதும் தெரியவந்துள்ளது. மாற்றுத்திறனாளிகள் பெண்கள் பலரை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளனர். பெண்கள் - சிறுமிகளை போதைப் பொருட்கள் கொடுத்து பாலியல் வன்முறைகளும் செய்துள்ளனர். அங்கு இருந்தவர்களில் 21-க்கும் மேற்பட்டோர் என்ன ஆனார்கள் என்பதும் தெரியவில்லை.

ஜோதி ஆசிரமம் உரிய அனுமதி பெறாமல் கடந்த 15 ஆண்டுகளாக செயல்பட்டு வந்துள்ளது. இதில் அனுமதிக்கப்பட்டவர்களை விவசாய வேலைகளுக்கு பயன்படுத்துவது, மாடு மேய்க்க விடுவது, அப்படி செய்யாதவர்களை சங்கிலியால் அடித்து சித்ரவதைகளுக்கு உள்ளாக்குவது, குரங்குகளை விட்டு கடிக்க விடுவது, வெளிமாநிலங்களுக்கு கடத்துவது உள்ளிட்ட மனித உரிமை மீறல் செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட, ஆசிரம நிர்வாகி அன்பு ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா மற்றும் ஊழியர்கள் என 9 பேர் மீது 13 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்துறை கைது செய்திருப்பது வரவேற்கதக்கது. அதே நேரத்தில், ஆசிரமத்தை அரசு கையகப்படுத்த வேண்டும்.

இந்த ஆசிரமத்தில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்தும், பாலியல் வன்முறைகள் குறித்தும், காணாமல் போயுள்ளவர்கள் குறித்தும் விசாரிப்பதற்கு, சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அனுமதியின்றி அன்பு ஜோதி ஆசிரமம் செயல்பட அனுமதித்த சமூக நலத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாடு முழுவதும் செயல்படும் ஆசிரமங்கள், காப்பகங்கள், முதியோர் இல்லங்கள் முறையாக செயல்படுகின்றனவா என்பது குறித்து ஆராய்வதற்கு, ஓய்வுபெற்ற நீதிபதிகள், மனித உரிமை ஆர்வலர்கள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE