தலித், வன்னியர்களுக்கான சமூக நீதிக்காக முதல்வர் ஸ்டாலினை சந்தித்தோம்: அன்புமணி விளக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: "தமிழ்நாட்டில் தலித் மற்றும் வன்னியர் ஆகிய இரண்டு பெரிய சமுதாயங்கள் மிக மிக பின்தங்கிய நிலையில் இருக்கின்றன. இந்த இரண்டு சமுதாயங்களும் தமிழகத்தின் மக்கள் தொகையில் 40 விழுக்காடு. இந்த 40 விழுக்காடு மக்கள் முன்னேறினால் தமிழ்நாடு முன்னேற்றம் அடையும்" என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சனிக்கிழமை சந்தித்தார். இந்தச் சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: "எம்பிசி பிரிவிலி வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு தொடர்பாக முதல்வரை பாமக சார்பில் குழுவாக சந்தித்தோம். கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, எம்பிசி பிரிவை மூன்றாக பிரித்து அதில் வன்னியர்களுக்கு 10.5, சீர் மரபினருக்கு 2.5 மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 7 விழுக்காடு என்ற இடஒதுக்கீட்டை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்.

உச்ச நீதிமன்ற சரியான முறையில் தரவுகள் என்று தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தது. அதன்பிறகு, தமிழக அரசு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை மறுசீரமைக்கப்பட்டது. அதன்தொடர்ச்சியாக இந்தாண்டு ஜனவரி மாதத்தில், 20 விழுக்காடு எம்பிசி தொடர்பாக உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு ஏற்ப, ஓர் அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது.

அதில், பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், இந்த 20 விழுக்காடு தொடர்பாக இன்னும் மூன்று மாதத்தில் தரவுகளை சேகரித்து தமிழக அரசுக்கு பரிந்துரைகளை வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று மாதங்களில் ஒருமாதம் கடந்துவிட்டது. எனவே அதை இன்னும் கொஞ்சம் வேகப்படுத்தி, இந்தாண்டு கல்வி, வேலைவாய்ப்புகளுக்கான சேர்க்கைகளுக்கு ஏதுவாக கொண்டுவர வேண்டும் என்று முதல்வரைச் சந்தித்து கோரிக்கை வைத்திருக்கிறோம்.

தமிழ்நாட்டில் இரண்டு பெரிய சமுதாயங்கள் மிக மிக பின்தங்கிய நிலையில் இருக்கின்றன. ஒன்று தலித் சமுதாயம், மற்றொன்று வன்னியர் சமுதாயம். இந்த இரண்டு சமுதாயங்களும் தமிழகத்தின் மக்கள் தொகையில் 40 விழுக்காடு. இந்த 40 விழுக்காடு மக்கள் முன்னேறினால் தமிழ்நாடு முன்னேற்றம் அடையும். இந்த சமூக நீதியின் அடிப்படையில்தான் இந்த பிரச்சினையை எடுத்திருக்கின்றோம்.

இதனால் யாருக்கும் எந்தவிதமான பாதிப்பும் கிடையாது. எந்த சமுதாயத்துக்கும் எதிரானதும் கிடையாது. எனவே அரசு இதை வேகப்படுத்தி, தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய மக்களுக்கு சமுக நீதியை வழங்க வேண்டும் என்று முதல்வரை சந்தித்து வலியுறுத்தியுள்ளோம்" என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE