கர்நாடக பட்ஜெட்டில் மேகதாது அணை அறிவிப்பு: வைகோ கண்டனம்

By செய்திப்பிரிவு

சென்னை: கர்நாடக பட்ஜெட்டில் மேகதாதுவில் அணை கட்டப்படும் என்று வெளியான அறிவிப்புக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்," கர்நாடக சட்டமன்றத்தில் 2023 -24 ம் நிதியாண்டிற்கான இடைக்கால வரவு செலவுத் திட்ட அறிக்கையை முதல்வர் பசவராஜ் பொம்மை தாக்கல் செய்து இருக்கிறார். இந்த ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலை எதிர்நோக்கி உள்ள நிலையில், பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

மேகதாது அணைத் திட்டம், பெங்களூருவுக்கு குடிநீர் மற்றும் மின் உற்பத்திக்கான திட்டமாகும். மேகதாது அணை கட்டுவதில் கர்நாடகா உறுதியாக இருக்கிறது. அதற்குத் தேவையான நிதியை ஒதுக்கவும், தயாராக இருக்கிறது என்று முதல்வர் பசவராஜ் தனது பட்ஜெட் உரையில் குறிப்பிட்டு இருக்கிறார்.

கடந்த 2022 ஜூன் 17 அன்று காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 16வது கூட்டம், ஆணையத் தலைவர் எஸ்.கே.ஹல்தேர் தலைமையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு, அதற்கான நிகழ்ச்சி நிரலில் மேகதாது அணை பிரச்சினை குறித்தும் விவாதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. காவிரி நீர் மேலாண்மை ஆணையம், கர்நாடக அரசின் மேகதாது அணையின் திட்ட வரைவு அறிக்கை குறித்து கலந்தாய்வு செய்யப்படும் என்று அறிவித்தது.

இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்புத் தெரிவித்தது மட்டுமின்றி, உச்சநீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்தது. அதில், “மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பாக காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 16வது கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதை ஏற்க முடியாது. இது விதி மீறலாகும். மேலும், காவிரி நீர் பங்கீட்டு வழக்கின் இறுதித் தீர்ப்புக்கு எதிரானது. மேகதாது அணை குறித்து கூட்டத்தில் விவாதிப்பது, காவிரி மேலாண்மை ஆணையம் தனது வரம்பை மீறிய நடவடிக்கையாக அமையும்” என்று சுட்டிக்காட்டியிருந்தது.

தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு குறித்து, கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை கடும் விமர்சனம் செய்தார். ”காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், மேகதாது அணை வரைவு அறிக்கை தொடர்பாக ஆலோசிக்க தடை விதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுதாக்கல் செய்துள்ளது. இதுபோன்று தமிழக அரசு பல்வேறு மனுக்களை தாக்கல் செய்துள்ளது.

மத்திய அரசு எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக் கூடாது என கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசுக்கு எந்த அதிகார வரம்பும் இல்லை. எந்தவிதமான அணைகள் கட்டவும், நீர்ப்பாசன திட்டங்களுக்கு அனுமதி வழங்கவும் இந்த ஆணையத்திற்கு, தனி அதிகாரம் உள்ளது” என்று முதல்வர் பசவராஜ் பொம்மை கூறினார்.

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் பணி என்பது, உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின்படி, காவிரியில் தமிழகத்திற்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் கர்நாடகம் திறந்துவிடப்படுவதை உறுதி செய்வது மட்டும்தான். அதற்குக்கூட அதிகாரம் ஏதுமற்ற அமைப்பாகத்தான் மேலாண்மை ஆணையம் இருக்கிறது.

காவிரியில் நீரைத் தடுத்து, மேகதாது 9 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 67.14 டி.எம்.சி. நீர் கொள்ளளவு கொண்ட அணையைக் கட்டவும், 400 மெகாவாட் நீர் மின் உற்பத்தி நிலையத்தை அமைக்கவும் கர்நாடகம் திட்டமிட்டுள்ளது. இதை அனுமதித்தால் தமிழகத்தின் காவிரி படுகை மாவட்டங்கள் பாலைவனமாக மாறிவிடும்.

கடந்த 48 ஆண்டுகளில் 15.87 லட்சம் ஹெட்டேர் நிலம் சாகுபடி பரப்பை நாம் இழந்துள்ளோம். ஆனால் கர்நாடகத்தின் பாசனப் பரப்பு 9.96 இலட்சம் ஹெக்டேரிலிருந்து 38.25 இலட்சம் ஹெக்டேராக அதிகரித்துவிட்டது. தமிழகத்தின் காவிரி நீர் உரிமையைப் பறித்து வரும் கர்நாடகா, மீண்டும் மேகதாது அணையைக் கட்டியே தீருவோம் என்று முனைந்திருப்பதும், ஆளும் பா.ஜ.க. அரசு பட்ஜெட்டில் குறிப்பிட்டு இருப்பதும் கடும் கண்டனத்திற்கு உரியதாகும். கர்நாடகம், நடுவர் மன்றத் தீர்ப்பையும், உச்சநீதிமன்றத் தீர்ப்பையும் மீறுவதை அனுமதிக்கக் கூடாது என்று தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்." இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

53 mins ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்